115 நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த கவிஞர் விவேகா!

115 நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த கவிஞர் விவேகா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், ஒரே மேடையில் 115 புத்தகங்களை வெளியிட்டு கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்மொழிப் படைப்புகள் சங்கமித்த இந்தக் கண்காட்சியில், புத்தக வெளியீடுகளுக்கென பிரத்யேகக் கலையரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 14-ஆம் தேதி இந்த அரங்கில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும் கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் பிரம்மாண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கற்றல் பதிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட 115 நூல்களை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் விவேகா ஒரே நேரத்தில் வெளியிட்டு, படைப்பாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ், ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மற்றும் மலையாளம் என ஐந்து வெவ்வேறு மொழிகளில் 115 எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 115 படைப்புகள் ஒரே தருணத்தில் வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறை எனப் பன்மொழி அறிஞர்கள் குறிப்பிட்டனர். சர்வதேச அரங்கில் தமிழ்ப் படைப்புகளும் பிற மொழி நூல்களும் இவ்வாறு ஒருங்கிணைந்து வெளியிடப்பட்டது இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, பன்னிரண்டு வயதுக்குள் ஐந்து மொழிகளில் நூல்களை எழுதி அசத்திய சிறுமி காதம்பரி மேடையில் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார். இளம் வயதிலேயே பன்மொழிப் புலமையுடன் படைப்புகளை உருவாக்கிய அவரது திறனை அரங்கில் இருந்த அனைவரும் பாராட்டினர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, தங்களுக்கு நல்வாழ்வும் ஆதரவும் வழங்கி வரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி மற்றும் நல்வாழ்த்துகள் தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஷார்ஜாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கடல் கடந்து நடைபெற்ற சர்வதேசப் புத்தகத் திருவிழாவில், தமிழ் மொழி சார்ந்த பதிப்பகத்தின் முயற்சியால் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் விவேகா வெளியிட்டிருப்பது, உலக அளவிலான இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.