ஏ.ஓ.டி.: விமர்சனம்
இந்திய சினிமாவில் அறிவியல் சார்ந்த கதைக்களங்கள் மிகக் குறைவாகவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (ஏஓடி). இயக்குநர் பவன் சதினேனியின் இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் நடிப்பில் ஒரு சாதாரணப் பெண்ணின் அசாத்திய விண்வெளி லட்சியத்தை இப்படம் பேசுகிறது.
அடிப்படைச் சாலை வசதிகள் கூட எட்டாத ஒரு பின்தங்கிய கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி கல்பனாவுக்கு (சாத்விகா), பள்ளியில் நடைபெறும் கோளரங்க நிகழ்வின் மூலம் அறிவியல் செயற்பாட்டாளர் நாசர் விண்வெளி குறித்த ஆர்வத்தை விதைக்கிறார். அந்த ஒரு பொறியிலிருந்து தனக்குள் விண்வெளி வீரராக வேண்டும் என்ற பெருங்கனவை வளர்த்துக் கொள்கிறார் கல்பனா. ஆனால், விதியின் விளையாட்டாக, மதுவுக்கு அடிமையான தந்தையின் கட்டாயத்தால் கிருஷ்ணா (துல்கர் சல்மான்) என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்துப் பெண்ணின் விண்வெளிப் பயணம் சாத்தியமானதா, இல்லையா என்பதே இத்திரைப்படத்தின் மையக்கரு.
ஒரு எளிய பெண்ணின் வானளாவிய கனவை, பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான அளவுகோலில் திரையில் வடித்திருக்கிறார் இயக்குநர் பவன் சதினேனி. கல்பனா கதாபாத்திரத்தை ஏற்றுள்ள சாத்விகா வீரவல்லி, தனது லட்சிய நெருப்பு அணையாமல் படம் முழுவதும் காத்து நிற்பதைத் தனது நடிப்பால் உணர்த்துகிறார். ஒரு வெகுளித்தனமான கிராமத்துச் சிறுமியாகத் தொடங்கி, தடைகளைத் தாண்டி விண்வெளி வீராங்கனையாகப் பரிணமிக்கும் வரை அவரின் நடிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. சமூகத்தின் கேலி, கிண்டல், அவமானம் என ஒவ்வொரு எதிர்மறைச் சூழலையும் எதிர்கொள்ளும் அப்பாவிப் பெண்ணாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடுகின்றன.
மனைவியின் லட்சியத்திற்குத் தோள்கொடுக்கும் கணவனாகக் கிருஷ்ணா பாத்திரத்தில் துல்கர் சல்மான் படம் முழுக்கப் பயணிக்கிறார். நடந்தது கட்டாயத் திருமணம் என்பதை உணர்ந்ததும் ஏற்படும் குற்றவுணர்ச்சி தொடங்கி, மனைவியின் கனவை நனவாக்கக் குஜராத் நிலக்கரிச் சுரங்கத்தில் கடின உழைப்பைச் செலுத்துவது வரை தனது நடிப்பில் அபாரமான நேர்மையைக் காட்டியிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இப்படியொரு கணவர் கிடைப்பது அரிது என்ற எண்ணம் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் அந்தப் பாத்திரத்தை நம்பவைத்துத் தனித்து நிற்கிறார் துல்கர்.
இவர்களுடன் நாசர், சின்னி ஜெயந்த், கௌதம் வாசுதேவ் மேனன், முரளி சர்மா ஆகியோர் தங்களுக்குரிய பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குஜராத் பெண்ணாக வரும் ருஹானி சர்மாவின் காட்சிகள் படத்திற்கு அழகு சேர்க்கின்றன. விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணாக ஸ்ருதி ஹாசன் தனது வழக்கமான துறுதுறுப்பான நடிப்பால் கவர்கிறார்.
வெறும் தன்னம்பிக்கைக் கதையாக மட்டும் சுருங்கிவிடாமல், இளைய தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. எட்டாக்கனியாகத் தோன்றும் ஒரு இலக்கைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையை, அனைவரும் ரசிக்கும்படியான சாத்தியக்கூறுகளுடன் எழுதியிருப்பது படத்திற்குப் பெரும் பலம். தொழில்நுட்ப ரீதியாக ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ராக்கெட் உருவாக்கத் தளங்களையும் குஜராத் நிலக்கரிச் சுரங்க உலகத்தையும் மிகத் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தி காட்சி ஆர்வத்தைத் தூண்டுகிறது.
திரைக்கதையில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. முற்பாதியில் மனைவிக்காகத் துல்கர் எடுக்கும் அதிரடி முடிவு தொடக்கத்தில் நம்பும்படியாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அந்தக் குறையைச் சரிசெய்கின்றன. இருப்பினும், துல்கர் கதாபாத்திரம் இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பதற்கான பின்னணியோ, திருமணம் குறித்த உண்மை அவருக்குத் தெரியாமல் போன விதமோ தெளிவாக விளக்கப்படவில்லை. கதைக்குள் அமெரிக்க நிறுவனம் நுழையும் விதம் சற்று வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது. மேலும், மனைவி விண்வெளிக்குச் செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்த பயம் ஆரம்பத்தில் இல்லாமல், உச்சக்கட்டக் காட்சியில் மட்டுமே துல்கருக்கு ஏற்படுவது போன்ற சித்தரிப்பைத் தவிர்த்திருக்கலாம். நேரடித் தெலுங்குத் திரைப்படம் என்பதால், தொடக்கக் காட்சிகளில் சில இடங்களில் உதட்டசைவு தமிழுக்குப் பொருந்தாமல் சற்றுத் துருத்திக் கொண்டு தெரிகிறது.
மொத்தத்தில், ஆங்காங்கே தென்படும் சிறிய தர்க்கரீதியான குறைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பார்த்தால், ஒரு சாதாரணப் பெண்ணின் அசாதாரணக் கனவை அழகாகச் சுமந்து வந்திருக்கும் ‘ஏஓடி’ (ஆகாயத்தில் ஒரு தாரகை), குடும்பத்துடன் அவசியம் காண வேண்டிய ஒரு தரமான படைப்பு.

