“நான் ஒரு சாதாரண பாய்!”: டெலிவரி பாய்’ விழாவில் வெடித்த லியோ சிவக்குமார்!

“நான் ஒரு சாதாரண பாய்!”: டெலிவரி பாய்’ விழாவில் வெடித்த லியோ சிவக்குமார்!

நானி எழுதி இயக்கியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, துஷ்யந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்வெளியீட்டு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

லியோ சிவக்குமார்:

நான் திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பு வரைக்கும் வெறும் சிவகுமாராகத்தான் இருந்தேன். ஆனால், சினிமாவில் கால் வைத்த பிறகு ‘லியோனி பையனாக’ மாறிவிட்டேன். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நெப்போ கிட், நெப்போட்டிசம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ‘மீசைய முறுக்கு 2’ படம் பார்க்கும்போதுதான் எனக்கு நெப்போட்டிசம் என்பதன் அர்த்தமே புரிந்தது. நான் எங்க அப்பாவுக்குப் பிறந்தவன். என் பெயர் லியோ சிவகுமார்.

சினிமாவில் ஆரம்பத்தில் எத்தனையோ படிகள் ஏறி இறங்கியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன் என்னவெல்லாம் கஷ்டப்படுவானோ, அதையெல்லாம் நானும் கடந்துதான் வந்தேன். ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு நிறையப் போராட வேண்டும். அதற்கு என் இயக்குநரும் சாட்சியாக இருக்கிறார். இதையெல்லாம் கடந்துதான் இங்கே வந்து நின்றிருக்கிறோம். இதில் எங்கிருந்து எங்க அப்பா வந்தார்? அவரால் நான் எப்படி உள்ளே வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். எங்கள் ஒட்டுமொத்தப் படக்குழுவும் சேர்ந்து கடுமையாக உழைத்திருக்கிறோம். அந்தப் படத்தை நீங்கள் திரையில் பாருங்கள். என் நடிப்பிலோ அல்லது கதைத் தேர்விலோ நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், என்னைக் கழுவிக் கழுவி ஊத்துங்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. அதேபோல, நான் ஏதாவது நல்லது செய்திருந்தால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே, என்னை ஒரு தனிப்பட்ட கலைஞனாகப் பாருங்கள் என்று உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.ஐ.லியோனி:

இயக்குநர் நானிக்கும் லியோ சிவக்குமாருக்கும் இடையே இருக்கும் புரிதலும், அவர்களது நீண்டகால உழைப்பும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு தாய் தனது மகனுக்குச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் நானி அழகாகக் காட்டியிருக்கிறார். ராதிகா சரத்குமார் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் உயிராக அமைந்துள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக சண்டைக்காட்சிகளும் அவற்றுக்கான பின்னணி இசையும் மிகவும் அருமையாக உள்ளன. துஷ்யந்த், பிரிகிடா உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். லியோ சிவக்குமார் நடிகராக மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்புப் பணிகளிலும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார். ஒரு தந்தையாகவும், இந்தப் படத்தின் ரசிகனாகவும் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

எனது அன்புச் சகோதரர் கண்ணன் ரவி, பலருக்கும் உதவி செய்து வருபவர். எனது குடும்பத்திற்குத் தேவைப்பட்ட மருத்துவ உதவியைக்கூட சரியான நேரத்தில் செய்து கொடுத்தவர். அவரைப் போன்ற மனிதர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்குப் பெரிய பலம். இந்தப் படத்தின் மையக்கருத்து நன்றி மறக்காமல் வாழ வேண்டும் என்பதுதான். ஒருவரிடம் உதவி பெற்றால், அதை நினைவில் வைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற அழகான கருத்தை இயக்குநர் நானி கதையின் வழியாகச் சொல்லியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பண்பை வலியுறுத்தும் திரைப்படம் இது. பலருடைய உழைப்பில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் படத்தின் நல்ல அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் ஆதரவில்தான் இந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. நன்றி.

Related Posts