கணவன் – மனைவி காதலை மெலடியாகச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் K. குமார் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கியுள்ள திரைப்படம் ‘தகப்பன்’. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் வரிகள் எழுத, ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் பாசத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்தப் புதிய மெலடி பாடல் புதுமணத் தம்பதிகளின் காதலையும், அழகான இல்லற வாழ்க்கையையும் எந்தவித விரசமும் இன்றி குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநரான நாயகனுக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் நடக்கும் திருமணம், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொடங்கும் புதிய வாழ்க்கை, கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் எனக் கதையின் முக்கிய ஃப்ளாஷ்பேக் திருப்பங்களை இப்பாடல் சுவாரசியமாக விவரிக்கிறது.
M. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். திங்க் மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் (OTT) உரிமையை Zee5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பாடல் வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=0l9VTSNSqV0

