தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அதிரடி!
தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் புதிய தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘பார்க்கிங்’, ‘TTT’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிராத்தனா நாதன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் பிரபலமான தேஜு அஸ்வினி, அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த கே.எஸ். சினிஷின் ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ (Soldiers Factory) நிறுவனமும், சஞ்சன் ஜி. தொடங்கியுள்ள ‘ரெடாக்டட் ஸ்டுடியோஸ்’ (Redacted Studios) நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களைத் தயாரித்து வரும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ், இப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் தடம் பதிக்கிறது.
இந்தப் புதிய கூட்டணி குறித்துத் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ் கூறுகையில், “எங்களின் அடுத்த தெலுங்கு – தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்காக ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. திறமையான நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாற்றல் கொண்ட தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து உருவாகும் சுவாரஸ்யமான காதல் கதை இது. புதிய திறமைகளையும் புதுமையான சிந்தனைகளையும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி எப்போதும் வரவேற்கிறது. பல்வேறு மொழிகளில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்குத் தற்காலிகமாக ‘புரொடக்ஷன் No. 7’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

