இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’: ரகசிய ராத்திரி.. புதையல் வேட்டை! மிரட்டும் டீசர்!
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரவு நேரத்துக் கதைகளுக்கும் கிரைம் திரில்லர் களங்களுக்கும் தனி மவுசு உண்டு. அந்த வரிசையில், ராபர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் களைகட்டியது.
வருகிற நவம்பர் இருபத்தி ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை, இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுப் படக்குழுவை வாழ்த்தினர்.
விழாவில் முதலில் பேசிய தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ், நாகர்கோவிலைச் சேர்ந்த தான் திரைப்படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தபோது இயக்குநர் சிவபிரபு சொன்ன கதை தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார். ஒரு கிராமத்தில் ஓர் இரவில் ஒருவருக்குக் கிடைக்கும் புதையலும், அது நன்மையா தீமையா என்ற சுவாரசியமுமே படத்தின் மையம் என்றும், கதை முழுக்க இரவில் நடப்பதால் படப்பிடிப்பையும் இரவிலேயே நடத்தி முடித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய நடிகர் உதயராஜ், படம் தொடங்கிய பதினைந்து நிமிடங்களிலிருந்தே பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான திரைக்கதை இது என்றும், பழனியின் கடும் குளிரில் படக்குழு உழைத்த விதத்தையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாயகன் இனிகோ பிரபாகருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் அரவிந்த் பேசுகையில், நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் சிவபிரபுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைக் கோரினார்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரம் தனது உரையில், ஐந்து நண்பர்களைச் சுற்றி இருபத்தி நான்கு மணி நேரத்தில், அதாவது ஒரு இரவு மற்றும் ஒரு பகலில் நடக்கும் கதையைத் தங்களுக்குக் கிடைத்த வசதிகளைக் கொண்டு திரைக்கதைக்கு ஏற்ப கச்சிதமாகப் படமாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
விழாவில் சினிமா துறையின் நடைமுறைச் சிக்கல்களைப் போட்டுடைத்தார் விநியோகஸ்தர் குகன். ஐந்து நண்பர்களுக்கு இரவில் கிடைக்கும் ஒரு பொருள் அவர்களை எத்தகைய விபரீதங்களுக்குள் தள்ளுகிறது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் இப்படம், புதிய திறமையாளர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது என்றார். அதோடு நில்லாமல், டிக்கெட் முன்பதிவுத் தளங்களில் பின்பற்றப்படும் ரேட்டிங் முறையால் சிறிய படங்களின் வணிகம் சிதைக்கப்படுவதையும், சிலர் திட்டமிட்டே நூறு டிக்கெட்டுகளை வாங்கி எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புவதையும் அவர் சாடினார்.
முன்னணி நட்சத்திரங்களுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு சிறிய தயாரிப்பாளர்களுக்கு இல்லை என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்த அவர், வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களுக்கான திரையரங்க ஒதுக்கீட்டை வியாழக்கிழமை இரவு வரை இழுத்தடிக்காமல் ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
தனது வலிகளை மேடையில் கொட்டினார் அறிமுக இசையமைப்பாளர் பிரணவ் சூரஜ். பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், இசை நிறுவனங்கள் தனது திறமையை விடப் பின்புலத்தையே பார்த்ததாகக் கூறிய அவர், இயக்குநர் சிவபிரபு மட்டுமே தனது இசையைக் கேட்டு நம்பிக்கையளித்து இந்த வாய்ப்பை வழங்கியதாக நன்றி தெரிவித்தார்.
படத்தில் வில்லனாக நடித்துள்ள பிக் பாஸ் சத்யா, தன்னைத் தேடி வந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், இது குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்றும் கூறினார். தமிழில் தனது இரண்டாவது படத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சு கிருஷ்ணா அசோக், படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அளித்த ஆதரவால் பதற்றமின்றி நடிக்க முடிந்ததாகத் தெரிவித்தார்.
தனக்கே உரிய இலக்கிய மற்றும் தத்துவ நடையில் பேசிய இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா, பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு ‘ஓர் இரவு’ என்ற தலைப்பிற்கு முன்னால் ‘மின்னும்’ என்பதைச் சேர்த்து சிவபிரபு இப்படத்தை உருவாக்கியிருப்பதாகப் பாராட்டினார். ஆறு நாட்கள் கால்ஷீட் கேட்டுவிட்டு இரண்டு நாட்களிலேயே தனது காட்சிகளை முடித்து அனுப்பிய ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமாரின் வேகத்தை வேல்ராஜுடன் ஒப்பிட்ட அவர், இரவு என்பது மனிதர்களைக் காப்பாற்றும் என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் வரிகளை நினைவுகூர்ந்தார். மனிதனின் ஆசையும், அதனால் விளையும் துன்பங்களுமே இப்படத்தின் அடிநாதம் என அவர் விவரித்தார்.
இயக்குநர் மணிகண்டன் பேசுகையில், தன்னிடம் பல ஆண்டுகள் பணியாற்றிய சிவபிரபு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையைத் தன்னிடம் கூறியதாகவும், தனது அறிவுரைப்படி செல்போனிலேயே இதை ஒரு குறும்படமாக எடுத்துக் காட்டிய பிறகே தயாரிப்பாளர்களைச் சந்தித்து இப்படத்தைத் தொடங்கினார் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
படத்தின் இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் பேசுகையில், தான் இந்த மேடையில் நிற்பதைப் பார்க்க ஆசைப்பட்ட தனது தந்தை இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரது ஆசி தன்னை வழிநடத்துவதாக உருக்கமாகக் கூறினார். முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் வெறும் முப்பத்தி நான்கு குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமத்தில், அங்கிருந்த முதியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்த சவாலையும், தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
நடிகர் இனிகோ பிரபாகர் தனது உரையில், இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் படித்த உடனேயே இதை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறவிடக் கூடாது என்று முடிவு செய்ததாகக் கூறினார். அதன் பிறகு இயக்குநரை நேரில் சந்தித்து முழுக் கதையையும் கேட்டபோது தனக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், படத்தில் பணியாற்றிய அனைவருமே நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருந்ததால் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இயக்குநரின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும், அதை வெளிக்காட்டாமல் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் இயல்பாகவும் அமைதியாகவும் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இயக்குநர் பணியாற்றிய விதத்தை அவர் வியந்து பாராட்டினார்.
இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், இயக்குநர் சிவபிரபு எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்ற நம்பிக்கை தனக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறி வாழ்த்தினார். மேலும், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சி இயக்குநர் என அனைவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், ராபர்ட் ராஜ் போன்ற ஒரு தயாரிப்பாளர் தங்களுக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் கூறினார். எந்தவொரு விஷயத்தையும் இப்படிச் செய்தால் சிறப்பாக வருமா என்று கேட்டு, வரும் என்றால் உடனே அதை உருவாக்கச் சொல்லும் அளவிற்குத் தயாரிப்பாளர் சுதந்திரம் கொடுத்ததாகவும், படத்தைத் தனது குழுவினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்துவிட்டு அவர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்துத் தாங்களும் மகிழ்ந்ததாகவும் இனிகோ பிரபாகர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நிறைவாகப் பேசிய இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், தனது நண்பர் இனிகோ பிரபாகருக்காகவே இந்த விழாவிற்கு வந்ததாகக் கூறினார். தனது முதல் படமான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த விஜய் சேதுபதி, சூரி, சௌந்தர் ஆகியோர் இன்று உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு இணையான நடிப்புத் திறமை இருந்தும் இனிகோவிற்கு உரிய உயரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் தனக்குள் எப்போதும் உண்டு என்றார்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளராமல், நல்ல கதைக்காகக் காத்திருந்து ஐந்து கதைகளை நிராகரித்துவிட்டு இனிகோ தேர்ந்தெடுத்திருக்கும் இந்த ‘மின்னும் ஓர் இரவு’, அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து இனி வரும் காலங்களில் அவரது பெயரைச் சொல்லிப் படங்கள் வெளியாகும் அளவிற்கு வெற்றியைத் தரும் என மனதார வாழ்த்தினார்.

