ஜான் டோ: விமர்சனம்
கேரள-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு மலைப்பிரதேசத்தின் குளுமையான பின்னணியில் கதை விரிகிறது. வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பும் குடும்பம், எதிர்பாராத விதமாகத் தங்களது செல்லப்பிள்ளை ஹிருதயைக் காணாமல் தவிப்பது, தந்தையின் ஏளனப் பேச்சுகளைச் சவாலாக ஏற்றுத் தன் உழைப்பால் கேரள காவல் துறை அதிகாரியாக உயர்ந்திருக்கும் அர்ஜுன் தாஸ், அடையாளம் தெரியாத ஒரு சடலத்தின் வழக்கில் தமிழகம் வருவது எனத் தொடக்கம் முதலே கதை சூடுபிடிக்கிறது.
காணாமல் போன சிறுவனுக்கும், அர்ஜுன் தாஸ் கையில் இருக்கும் ‘ஜான் டோ’ வழக்கிற்கும் இருக்கும் மர்மமான தொடர்பைக் கண்டறியும் பணியில் அவர் இறங்குகிறார். அவருடன் இணைந்துகொள்ளும் பெண் காவல் அதிகாரி சஞ்சனா நடராஜனின் அதிரடியான களமிறக்கமும், விசாரணையின் போது அவர்கள் கடக்கும் சவால்களும் கதையை விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றன.
இந்த விசாரணையில் முக்கியத் தடயமாக மாறுவது கடத்தப்படும் குழந்தைகளின் மேல்பற்களுக்கு இடையே இருக்கும் ‘டயாஸ்டீமா’ இடைவெளிதான். ஹிருதய் ஒருகட்டத்தில் உயிருடன் திரும்பினாலும், தன் சொந்தப் பெயரைக் கூட மறந்துவிட்டுத் தன்னை கேபிரியேல் என்று அழைத்துக் கொள்வதும், அவன் கையில் ஏஞ்சல் என்ற பொறிக்கப்பட்ட தங்கக் கையணி இருப்பதும் ஒட்டுமொத்தக் கதையையும் ஒரு புதிய திருப்பத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இயக்குநர் மதுமிதாவின் காட்சியமைப்பும், ஷாட் தேர்வும், ஃபிரேமிங்கும் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளன. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பிரதேசத்தின் அழகையும், திரில்லர் கதைக்குத் தேவையான மர்மச் சூழலையும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை காட்சிகளின் வீச்சைக் கூட்டி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் செல்கிறது.
அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலாலும், மிரட்டலான நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார். சஞ்சனா நடராஜன் கட்டுப்பாடான காவல்துறை அதிகாரியாகத் திரையை ஆக்கிரமிக்கிறார்; எனினும் சில இடங்களில் அவரது அதட்டல்கள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகத் தோன்றினாலும், ஒட்டுமொத்தமாக அவரது பங்களிப்பு சிறப்பு. ஹிருதயாக நடித்துள்ள நீரவ் மற்றும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
முதல் பாதியில் அடுக்கப்படும் மர்ம முடிச்சுகளும், இடைவேளையில் அரங்கேறும் அதிரடி திருப்பமும், இரண்டாம் பாதியின் வேகமான நகர்வும் படத்திற்குப் பெரிய பலமாக அமைகின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும், மேக்கிங் அளவிலும் படக்குழு காட்டியுள்ள மெனக்கெடல் திரையில் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், இவ்வளவு நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் பயணப்பட்ட படம், கிளைமாக்ஸில் சற்று தடுமாற்றத்தைச் சந்திக்கிறது. உயிரோட்டமான குடும்பச் சூழல், உறவுகளின் மீதான பாசம் போன்றவற்றை நமது மண்ணின் தன்மைக்கேற்பக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, மேற்கத்திய பாணியிலான பெயர்களையும் வார்த்தைகளையும் திணித்திருப்பதுடன், இறுதிக் கட்டத்தில் கதாபாத்திரம் எடுக்கும் சில விசித்திரமான முடிவுகள் பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
குற்றவாளியின் பின்னணியையும், அவனது செயல்களுக்கான உளவியல் காரணங்களையும் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் விவரித்திருந்தால் இந்தத் திரில்லர் பயணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தாக அமைந்திருக்கும்.

