பிளாக் கோல்டு: விமர்சனம்: ‘முடி’ந்த வரை மிரட்டும் கிரைம் திரில்லர்!
மனிதனின் தலைமுடியை மையமாக வைத்து உலக அளவில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகத்தை மிகவும் தத்ரூபமாகப் பதிவு செய்து, இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்டகாசமான அதிரடி மற்றும் கிரைம் திரில்லர் படம்தான் இந்த ‘பிளாக் கோல்டு’.
ஒரு சர்வதேச நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய லாரி ஓட்டுநரான ஹீரோவின் தந்தை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புமிக்க சரக்குடன் ஆந்திராவில் இருந்து பயணிக்கிறார். அந்தச் சரக்கு போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச் செல்லாததால் ஏற்படும் குழப்பமும், சரக்கை அவர்தான் கடத்தியிருப்பாரோ என்ற முதலாளியின் தவறான சந்தேகமும் கதையைத் திறம்பட நகர்த்துகின்றன. தன் தந்தைக்கும் அந்தப் பொதிக்கும் நேர்ந்த உண்மை என்ன என்பதைத் கண்டறியக் களமிறங்கும் ஹீரோ வெற்றியின் பயணம் பார்வையாளர்களை மிரள வைக்கிறது.
தப்பியோடும் வழியில் அப்பாவைத் தாக்கியவர்களைத் த தகுந்த பாடம் புகட்டுவதும், தந்தைக்கு அநீதி இழைத்தவர்களைத் தேடிச் சென்று வீழ்த்துவதும் என ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் சோர்வில்லாமல் அனல் பறக்கக் களமாடியிருக்கிறார் வெற்றி. காதல் காட்சிகளிலும் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து அசத்துகிறார்.
வில்லன் முகாமில் அருள் டி சங்கர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; அவருக்குச் சற்றும் சளைக்காமல் களம் காணும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான கம்பீரமான கெத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பணத்திற்காக எதையும் செய்யும் கொடூரக் கும்பலின் தலைவனாக வரும் ‘பரியேறும் பெருமாள்’ கராத்தே வெங்கடேஷின் பார்வை மட்டுமே திரையரங்கில் பார்வையாளர்களைப் பதைபதைக்க வைக்கிறது. அந்த அணியில் வலம்வரும் இளைஞனின் நடிப்பும் வெளிப்படுத்தும் வில்லத்தனமும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
காவல்துறை அதிகாரியாகப் படத்தின் தயாரிப்பாளர் மூர்த்தியின் துடிப்பான நடிப்பும் தெனாவட்டான பாணியும் வெகுவாகக் கவர்கிறது; உயரதிகாரியாக அபிராமி வெங்கடாசலத்தின் கம்பீரமான தோற்றமும் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம் சேர்க்கிறது. ஹீரோவின் அப்பாவாக வந்து செல்லும் லிவிங்ஸ்டன், பாசமான குடும்பத் தலைவனாகவும் விசுவாசமான பணியாளராகவும் தன் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். பிரியலயா தனக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளில் காதல், கோபம், கனிவு போன்ற உணர்ச்சிகளை மிகவும் பக்குவமாக வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளார். துளசி, சபீதா ராய், சித்து குமரேசன், கே.பி.ஒய் ராமர், ஜப்பான் குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து படத்தின் வெற்றிக்குப் பங்களித்துள்ளனர்.
கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதோடு, பாடல்களுக்கு இதமான இசையைக் கொடுத்துக் காதுகளுக்குத் தேன் வந்து பாய்ச்சுகிறது. சந்தோஷ்குமார் வீராசாமியின் கேமரா கோணங்களும் ஒளிப்பதிவும் படத்திற்குத் சர்வதேசத் தரத்தைக் கொடுத்துள்ளன.
போதைப் பொருள் கடத்தும் இருபெரும் தாதாக்களுக்கு இடையேயான பனிப்போர் போல விறுவிறுப்பாகத் தொடங்கும் கதை, பின்னர் மனித முடியை ஏற்றுமதி செய்யும் தொழிலின் மீதும் அதன் பின்னுள்ள வணிகப் போட்டி பொறாமைகள் மீதும் கவனம் திருப்பும்போது கதையின் தளம் மேலும் சுவாரஸ்யமாக மாறுகிறது. வெறும் கழிவு என நாம் ஒதுக்கித் தள்ளும் தலைமுடியைக் கொண்டு உலக அளவில் இவ்வளவு பெரிய வர்த்தகம் நடப்பதும், முடி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இந்தத் தனித்துவமான விவகாரத்தை மிக நேர்த்தியான முறையில் கையாண்டுள்ள இயக்குநர் தீரன் அருண்குமார், கிடைத்த எளிய பட்ஜெட்டிலும் ஒரு பிரம்மாண்ட அனுபவத்தைத் தந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

