“சூர்யாவின் நற்பணிகள் – அரசியல்..!” ‘சீன்’ விழாவில் விநியோகஸ்தர் சக்திவேலன் பட்டாசு பேச்சு!   

“சூர்யாவின் நற்பணிகள் – அரசியல்..!” ‘சீன்’ விழாவில் விநியோகஸ்தர் சக்திவேலன் பட்டாசு பேச்சு!   

தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் நவம்பர் 6- ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில்,  ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் விழா களைகட்டியது.

ராஜசேகர் பாண்டியன் (இணை தயாரிப்பாளர், 2டி என்டர்டெய்ன்மென்ட்)

”சூர்யாவை இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப் போகிறீர்கள். இது செம காமெடியாக, ஜாலியாக, மாஸாக, த்ரில்லராக மற்றும் லவ்வுபுல்லான ஒரு கலகலப்பான காமெடி படமாக இருக்கும். ழகரம் ஸ்டுடியோஸின் முதல் படமான இது, இளம் திறமையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இயக்குநர் ஜித்து மாதவன் கதையைச் சொன்னபோதே நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்” என்றார்.ஜெயஸ்ரீ தாமோதரன் (இணை தயாரிப்பாளர், ழகரம் ஸ்டுடியோஸ்)

”நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற சூர்யா அண்ணாவின் கனவின் தொடக்கம்தான் இந்த ‘சீன்’. கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து ஓராண்டு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கினர். சமூக ஊடகங்களில் பிரபலமான திறமை வாய்ந்த இளம் கலைஞர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும்” என்றார்.

நடிகர் ராஜ் பிரியன்

”தேவகோட்டையைச் சேர்ந்த எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தபோதிலும், சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களின் வழிகாட்டுதலால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவின் தீவிர ரசிகரான எனக்கு, அவர் நடித்த ‘மௌனம் பேசியதே’ பட ரியாக்ஷன்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி, பாடும் வாய்ப்பையும் சுஷின் ஷ்யாம் வழங்கியுள்ளார்” என்றார்.

நடிகர் டிராவிட் செல்வம்

”2013-ல் சூர்யா படத்தின் முதல் காட்சியைப் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் படிக்கட்டில் அமர்ந்து பார்த்தவன் நான். இன்று அதே சூர்யா அண்ணாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எமோஷனலான தருணம். சமூக ஊடகத் திறமைசாலிகளை நம்பி இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். நடிகர் நஸ்லென் நடிப்பில் மிரட்டியுள்ளார்” என்றார்.விநியோகஸ்தர் சக்தி வேலன்

”20 ஆண்டுகளுக்கு முன் சூர்யாவின் நிழலில் பணியாற்றத் தொடங்கி, இன்று 300- க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். சூர்யா நல்ல விஷயங்களைச் செய்வதை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள்; ஆனால் அவர் மக்களுக்காக எதையும் சுயவிருப்பத்துடன் செய்கிறாரே தவிர அரசியலுக்காக அல்ல. ‘சீன்’ படம் இரண்டாம் பாதியில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்க தருங்களைக் கொண்ட தரமான க்ரைம் த்ரில்லர் காமெடி படம்” என்றார்.

நடிகர் ஆனந்தராஜ்

”இந்தப் படத்தில் நான் சூர்யாவிற்கு தந்தையாக நடித்துள்ளேன். இப்படத்தின் மூலம் ஜித்து மாதவனுக்கும் சூர்யாவிற்கும் ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்றார்.

நடிகர் நஸ்லென்

”இதுவே எனது முதல் தமிழ் படம். ரசிகர்கள் எனக்குக் காட்டும் பேரன்பு நெகிழ்ச்சியடைய வைக்கிறது. நவம்பர் 6-க்குப் பிறகும் இந்த அன்பு தொடரும் என்று நம்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம்

”எனது முதல் தமிழ் படத்திலேயே சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகை நஸ்ரியா நஜீம்

”12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சூர்யா அண்ணாதான்.  என்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கேரளா தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் வந்து இப்படத்திற்காக உழைத்துள்ளோம். நவம்பர் 6-ல் திரையரங்குகளில் சந்திப்போம்” என்றார்.

நடிகர் கார்த்தி

”தீபாவளி ரிலீஸ் எப்போதும் ஸ்பெஷல். ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’  என அண்ணாவின் பல்வேறு பரிமாணங்களை பார்த்துள்ளேன். இப்போது ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் டார்க் ஹியூமர் கலந்த புதுமையான ஜாலியான படமாக ‘சீன்’ வந்துள்ளது. ரசிகர்கள் அண்ணாவின் உழைப்பையும் அன்பையும் என்றும் தாங்கி நிற்பார்கள்” என்றார்.

இயக்குநர் ஜித்து மாதவன்

”ஆன்லைனில் வெளியான மூன்று டீசர்கள் மற்றும் ட்ரெய்லரை பாருங்கள்.  அதில் உங்களுக்குத் தோன்றுவதுதான் படம். நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் தீபாவளியைக் கொண்டாடுவோம்” என்றார்.

நடிகர் சூர்யா 

”என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு இசையமைத்த தேவா சாருக்கு எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். அவர்தான் என்னை அடையாளப்படுத்திய ஆரம்பப் புள்ளி. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ள ரசிகர்களின் பேரன்புதான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளது. சினிமா உலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நற்பணி மன்றமாக நீங்கள் செய்துவரும் ரத்த தானம் மற்றும் பல்வேறு உதவிகள் எனக்குப் பெருமை சேர்க்கின்றன. மருத்துவர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் இணைந்த ஒரே குடும்பம் என் குடும்பம்.

ஜோவும் நானும் ஜித்துவின் ‘ரோமான்சம்’, ‘ஆவேஷம்’ பார்த்து ரசித்தோம். அவருடைய உலகங்கள் வித்தியாசமானவை. இந்த ஆண்டும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், மூன்று படங்கள் வெளியாகின்றன. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வரிசையில் இந்த ‘சீன்’ படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும். சுஷின் ஷ்யாம் இசையில் நடிப்பது பெருமை. தனுஷ் தன் படத்தைத் தள்ளிவைத்து ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி.

வெற்றி, தோல்வி என்பது அன்றாடம் பார்ப்பதுதான். 50 வயதைக் கடந்த எனக்கு இப்போது மனதில் அமைதியும் ஆரோக்கியமும்தான் முக்கியம் தேவைப்படுகிறது. என் வாழ்க்கையில் என்னை கைபிடித்து அழைத்துச் செல்லும் ஜோதிகாவுக்கு நன்றி.

வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை அழகானது.  நாம் மூச்சு விடும் வரை எல்லா விஷயங்களும் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை. தோல்வி என்று எதுவும் முடிவு கிடையாது. எல்லாவற்றையும் சரி செய்ய இயலும்!”

 

Related Posts