“ரீல்ஸ் பாக்காதீங்க! கண்டவங்கள ஃபாலோ பண்ணாதீங்க!”: நடிகர் சூர்யா அதிரடி அட்வைஸ்!
நடிகர் சூர்யா, “ரீல்ஸை மட்டுமே பார்க்காதீங்க” என மாணவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில், கல்வி தொடர்பான நிதி உதவிகள் அளிக்கப்பட்டன.
( நிகழ்ச்சி குறித்த விரிவான செய்தி: http://கல்வி காக்க.. சிவகுமாரின் ‘ஐம்பொன்’ நிதி உதவி! )
அப்போது நடிகர் சூர்யா பேசியதாவது..
“இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. வீட்ல எப்படி ஒரு பிறந்தநாள் நடக்குமோ, அந்த மாதிரி ஒவ்வொரு முறையும் குடும்ப நிகழ்ச்சியாக மட்டுமேதான் இதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும் இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டேதான் இருக்குது. இங்கே வந்திருக்கிற மாணவ – மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, ஒவ்வொரு வாட்டியும் பரிசு எடுத்துட்டுப் போகும்போது, எவ்வளவு விஷயங்களைத் தாண்டி – கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பாகப் பார்க்கிறேன்.
இந்தப் பணியைச் செய்ய என் அப்பாவோட வழிகாட்டுதல்தான் காரணம்.. இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா வந்து இதை எடுத்துட்டுப் போக முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டோம்.
அகரம் வந்து 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால வரவழைக்க முடிஞ்சிருக்கு. இன்னும் இன்னும் பல விஷயங்கள் வந்து அகரம் மூலமா நடந்துட்டே இருக்குது.
சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்குச் சொல்லணும். படப்பிடிப்பில், ஒரு காட்சி, ஒரே ஷாட்டில் முடியறது கிடையாது. நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காகச் சில சமயம், 18, 30 வாட்டி கூட ‘ரீடேக்ஸ்’ போவோம். அப்போ டைரக்டர் வந்து “நீ ஃபெயில்” அப்படின்னு சொல்ல மாட்டாரு. “ஒன் மோர்” அப்படிம்பாரு. நான் டைரக்டரை வந்து வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது.
நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட ‘இன்னொரு வாட்டி பண்ணப் போறேன், ஒன் மோர்’னு சொல்லுங்க. ‘இன்னொரு வாட்டி பண்ண முடியும்’னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்குத் திருப்தியா இல்லாட்டி எதையும் சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும்.
இன்னொன்னு ரிஹர்சல்ஸ் (Rehearsals). நீங்க ஒரு ரெண்டரை மணி நேரம் படம் பார்த்துடுறீங்க, ஆனா கைதட்டலே பெறாத பல வாட்டி வந்து அந்த விஷயத்தை நாங்க வந்து ரிஹர்ஸ் பண்ணிருப்போம். பல வாட்டி ரிஹர்சல் போயிட்டே இருப்போம், அதுக்கெல்லாம் கைதட்டல் எல்லாம் கிடையாது. சோ, அதுதான் உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிஹர்சல்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது, எதுவுமே தெரியாது. திரும்பத் திரும்பப் பண்ண ரிஹர்சல்ஸ்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமா நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதெல்லாத்துல ஆசைப்படுறீங்களோ அது எல்லாத்துலயும் உங்களால வர முடியும்.
அப்புறம் ‘கிரெடிட்ஸ்’னு (Credits)… படம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு கிரெடிட்ஸ்ல எவ்வளவு பேர் அந்த படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும். ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து அப்படியே வெளியில வந்துறது இல்லை. அவ்வளவு உதவி இயக்குநர்கள் இருப்பாங்க, எழுத்தாளர்கள் இருப்பாங்க, காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க, மேக்கப் இருப்பாங்க, டிரைவர்ஸ் இருப்பாங்க, ஆயா இருப்பாங்க, லைட்மேன் இருப்பாங்க. இவங்க எல்லارோட உழைப்பின் மூலமாதான் ஒருத்தனால வெளியே வர முடியுது” என்றார்.
மேலும், “நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்துட்டோம் அப்படின்னா வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, பக்கத்துல லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியாக வந்திருக்காங்க? நமக்கு யார் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிறதை அவங்களை மறந்துட வேண்டாம்.
நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால ஒண்ணுமே கத்துக்கப் போறதே கிடையாது. யாரைப் ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமாகப் பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயேதான் நாம இருப்போம்.
அதனால வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் (Podcast) கேளுங்க. அதாவது ஒலிபரப்பு. அதுல நல்ல விஷயங்கள் பல இருக்கு.
சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது மறுபடியும் ‘ரீடேக்’—ஒன் மோர் கேளுங்க, ‘ரிஹர்சல்’ பண்ணுங்க, ‘கிரெடிட்ஸ்’—நம்ம யாருக்காக எதனால இங்க வந்தோமோ, எதனால இவ்வளவு தூரம் வந்தோமோ அதை மறக்கக்கூடாது. ஒருத்தரையாவது நாம் மேல உயர்த்துறதுக்கு முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது, நம்புங்க. என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே நாம் ஆக முடியும்” என்றார்.

