கல்வி காக்க.. சிவகுமாரின் ‘ஐம்பொன்’ நிதி உதவி!
சென்னை அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில், நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடந்தது. அதில், கல்வி காக்க, ஐம்பொன் போல ஐந்து முக்கிய நிதிச் சேவையை அளித்தார் சிவகுமார்.
பிளஸ்-டூ முடித்த 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கலைத்துறையில் நீண்டகாலச் சேவை ஆற்றிய மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது அளிக்கப்பட்டது.
மேலும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் செயல்படும் மூன்று அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது:
திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:
திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 – 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:
ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சுடர்’. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது. 
‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:
சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது.
விழாவில் திரைக்கலைஞர் சிவகுமார் தனது ஏழ்மைக்காலக் கல்விச் சிரமங்களை நினைவுகூர்ந்து, கல்வியும் ஒழுக்கமுமே வெற்றிக்கான அடிப்படை என்றார். நடிகர் சூர்யா பேசுகையில், மாணவர்கள் தோல்விகரமான தருணங்களில் துவண்டுவிடாமல் “ஒன் மோர்” கேட்டு முயல வேண்டும் என்றும், கடின உழைப்பும் (Rehearsals) சமூகத்தின் மீதான நன்றியுணர்வும் ஒருவரை உயர்த்தும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

