தடகளத்தில் அதகளம் செய்த 30+கள்! உற்சாகப்படுத்திய சூரி, விஜய் ஆண்டனி!
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2026” தடகளப் போட்டி, சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கத்தில் இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது. வயதை ஒரு தடையாக நினைக்காமல், சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கியுள்ள நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகளின் ஆர்வம் விளையாட்டு அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.
இந்த எழுச்சிகரமான விளையாட்டுத் திருவிழா, சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு M. செண்பகமூர்த்தி, செயலாளர் திரு K. சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்றும் கமிட்டி உறுப்பினர்களின் சிறப்பான கூட்டு முயற்சியாலும், தொலைநோக்குப் பார்வையாலும் மிகச் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தடகளப் போட்டியின் தொடக்க விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் பல முக்கிய பிரபலங்களும் ஆளுமைகளும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூரி மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும், SDAT சிறப்பு அதிகாரி மற்றும் ‘மிஷன் ஒலிம்பிக் 2036’ கூட்டு தலைமை நிர்வாக அதிகாரி A. மயில்வாகனன் IPS, ஃபான் ஃபோர் கெமிக்கல்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சுர்ய பிரகாஷ் M.P மற்றும் SNJ குழுமத்தின் தொழிலதிபர் S.N. ஜெயமுருகன் ஆகியோரும் விழாவில் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குத் தங்களின் கரங்களால் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
இன்றும் நாளையும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேலும் பல திறமையான தடகள வீரர்கள் வந்து குவிந்துள்ளனர். வயதைக் கடந்து ஓடியும், குதித்தும், சாதித்துக் காட்டும் இவர்களின் இந்தத் துள்ளல் நடையும் உற்சாகமும் விளையாட்டு ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்துள்ளதுடன், அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

