‘காகிதமலர்’: டோக்கியோ திரைப்பட விழாவில் இயக்குநர் & ஒளிப்பதிவாளர் செழியனின் படம் சாதனை!
தமிழ் மற்றும் இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக விளங்கியவர் மறைந்த செழியன்.
சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் புகைப்படக் கலையில் ஈடுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வந்த அவர், திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தார்.
2007-ல் ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி கவனத்தை ஈர்த்தார்.
திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தாலும், குறும்படங்கள் மற்றும் ஆவணப் படத்துக்கும் விரும்பி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2017-ல் டூலெட் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். இப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கொல்கத்தா சர்வதேச பட விழாவில் இந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதையும் டூலெட் வென்றது.
புற்று நோய் தாக்கம் காரணமாக, கடந்த ஜூலை மாறம் மறைந்தார். ஆனஆலும் தனது கலைப் பார்வையாலும், எதார்த்தமான படைப்புகளாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
செழியனின் , உலகத் தரத்திலான சுயாதீனத் திரைப்படங்களுக்கு உறுதுணை அவரது மனைவி பிரேமாதான். அவர்தான் தயாரிப்பாளர்.
செழியன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள “காகிதமலர்” விரைவில் அனைவரின் பார்வைக்கும் வரப்போகிறது. இந்த நிலையில், டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை, பிரேமா செழியன் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
“என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் “Asian Future” பிரிவில் ‘World Premiere’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது தொடர்புகொண்டாலும் எனது கோப்புகளைப் (Files) பற்றித் கேட்டு உடனே அனுப்பி வைத்த தபஸ் நாயக் அவர்களுக்கும், D Studioவின் A.L.விஜய் அவர்களின் பங்களிப்பிற்கும், தபாலில் அனுப்புவது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்த இயக்குநர் லீனா மணிமேகலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் உதவியாளர்கள் சங்கத் தமிழன், ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், D Studio கலரிஸ்ட் ராஜசேகர், மேனேஜர் சரவணன், எப்போது என்ன கேள்விகள் அனுப்பினாலும் பூர்த்தி செய்து அனுப்பும் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும், என் அன்பான, திறமையான மாணவன் செழியன் என்று எப்போதும் பெருமைப்படும் ஆசான், ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தயாரிப்பாளர் பிரேமா தெரிவித்து உள்ளார்.

