‘மீசைய முறுக்கு 2’: “– உலகளாவிய இசைக்கலைஞர்களின் கனவு!”: ஹிப்ஹாப் தமிழா ஆதி!களைக் கொண்டாடும் திரைக்காவியம்!”:

‘மீசைய முறுக்கு 2’: “– உலகளாவிய இசைக்கலைஞர்களின் கனவு!”: ஹிப்ஹாப் தமிழா ஆதி!களைக் கொண்டாடும் திரைக்காவியம்!”:

திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம், வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்ப வருகிறது! இளமைத் துள்ளல், வண்ணமயமான இசை, உணர்வுபூர்வமான கதைக் களம் என ஏற்கனவே சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இந்தத் படம்.

திரைப்படத்தின் பாடல்களான ‘Aura 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோவிந்தம்மா’, ‘அடி போடி’ மற்றும் ‘கலைவாணியே’ ஆகியவை இசைப் பிரியர்களின் இதயங்களைக் கவர்ந்து, செம ஹிட்ட அடித்து சென்சேஷனாகி வருகின்றன.

திரையரங்கு ரிலீஸ் மற்றும் விளம்பரப் பயணத்திற்கு (Promotional Tour) முன்னதாக, சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹிப்ஹாப் தமிழா ஆதி:

“இரண்டு வருட உலகப் பயணத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு திரைப்படம் மூலமாக உங்க எல்லாரையும் சந்திப்பதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. எந்த ஒரு புதுப் பயணத்தையும் தொடங்குவதற்கு முன்னாடி, ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களான உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். குறுகிய கால இடைவெளியில் அழைத்தும், உடனே வந்து இந்த நிகழ்வைச் சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. நமது தயாரிப்பாளர் சுந்தர் சி சாருக்கு இது ஒரு முக்கியமான செண்டிமெண்ட் என்பதால் இந்தச் சந்திப்பு எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.”

முதல் பாகத்திலிருந்து ‘மீசைய முறுக்கு 2’ எப்படி வேறுபடுகிறது என்பது பற்றி ஆதி பகிர்கையில்:

“‘மீசைய முறுக்கு’ என்னுடைய சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனா, ‘மீசைய முறுக்கு 2’ அதைவிடப் பெரிய, ஒரு சர்வதேச அளவில் எல்லோருக்குமான கதை! இசையையும், இசைக்கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்ட உலகளாவிய கதைக்களம் இது. இசையையே தங்கள் வாழ்க்கையாத் தேர்ந்தெடுத்த மக்களின் கனவுகள், போராட்டங்கள், சவால்கள் மற்றும் உணர்வுகளைப் பேசும் படமாக இது இருக்கும்.”

கானா கலைஞர்களின் உலகமும், அவர்களின் வாழ்வியலும் இப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று:

“குறிப்பா, தங்கள் வாழ்வின் கஷ்டங்களையும், அனுபவங்களையும் பாட்டாவே பாடி பிழைக்கும் கானா கலைஞர்களின் பதிவாக இந்தப் படம் இருக்கும். அவர்களின் கதைகளும், அவர்கள் வாழும் சூழலும் கதையோட முக்கியப் பகுதி.”

படத்தில் அப்பா கதாபாத்திரத்தைப் பற்றி உருக்கமாகப் பேசிய ஆதி, முதல் பாகத்தில் நடித்த மறைந்த விவேக் சாரை நினைவுகூர்ந்தார்:

“முதல் பாகத்தில் அப்பாவா நடித்த மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது. ஆனா, ‘மீசைய முறுக்கு 2’ கதை மூன்று வேறுபட்ட காலக்கட்டங்களைக் கடந்து போகுது. இதிலும் ஒரு மிக முக்கியமான அப்பா கதாபாத்திரம் இருக்கு. அந்த வேடத்துக்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் தான் ரொம்பப் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு.”

பாபா பாஸ்கர் ஆரம்பத்தில் இந்த வேடத்தில் நடிக்கத் தயங்கியதாகக் கூறிய ஆதி:

“ஆரம்பத்தில் அவருக்கு சின்னத் தயக்கம் இருந்தது. ஆனா என் மேல நம்பிக்கை வச்சு நடிக்க ஒப்புகிட்டார். பிரமாதமா நடிச்சிருக்காரு. இந்தப் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகரா அவருக்கு ஒரு முக்கிய இடம் கிடைக்கும்னு நான் முழுமையா நம்புறேன்.”

பஞ்சாபில் இருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞர் ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் கேத்திகா சர்மா கதாநாயகியாக அறிமுகமாகி படத்திற்கு புதுப் பரிமாணத்தைத் தருகிறார்.

இசை, நடனம், லட்சியம், காதல் என மாறுபட்ட உலகங்கள் ஒன்றிணையும் ‘மீசைய முறுக்கு 2’, ரசிகர்களுக்கு ஒரு எனர்ஜி நிறைந்த, அதேசமயம் உணர்வுபூர்வமான சினிமா அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை!

திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் கோவை, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் ரசிகர்களை நேரில் சந்தித்து விளம்பரப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தமது உரையை நிறைவு செய்து ஆதி கூறுகையில்:

“வெறும் கனவுகளோடு மட்டுமே இந்தத் துறைக்கு வந்தவன் நான். இந்த நீண்ட பயணத்தில் என்னை ஆதரித்து, கேள்விகள் கேட்டு, விமர்சித்து, உற்சாகப்படுத்திய அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தத் திரைப்படத்தை உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாக இருந்த சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேடமிற்கு என் ஆழமான நன்றிகள்.”

இசையால் பிணைக்கப்பட்ட கதை, வண்ணமயமான கதாபாத்திரங்கள், எல்லைகளைத் தாண்டிய உலகளாவிய கதைக் களத்தோடு வரும் செப்டம்பர் 25 அன்று ‘மீசைய முறுக்கு 2’ திரையில் ஆரவாரமாய் களம் இறங்குகிறது!