கோல்ட் கால்: விமர்சனம்

கோல்ட் கால்: விமர்சனம்

பெங்களூரு மாநகரத்தின் வேகத்திற்கு நடுவே, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக வலம் வரும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை, ஒரே ஒரு சம்பவத்தால் அடியோடு மாறுகிறது. அந்த அதிரடி திருப்பத்தை சிரிப்பும் பரபரப்பும் கலந்து வழங்கும் திரைப்படம்தான் ‘கோல்ட் கால்’.

வேலை வேட்டையில் இருக்கும் நான்கு பேருக்கு ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. ஆனால், வேலை செய்வதை விட அதை எப்படித் தட்டிக்கழிப்பது என்பதிலேயே அவர்களின் கவனம் இருக்கிறது. டார்கெட்டைப் பற்றி கவலையே படாமல் நேரத்தைக் கழிக்கும் இவர்களுக்கு, டார்கெட்டை முடி இல்லையென்றால் வேலை காலி என்ற நெருக்கடி வருகிறது. அதே நேரத்தில், ஒரு பெரும் புள்ளியின் வீட்டுச் சிறுவன் கடத்தப்பட, அந்தப் பழி எதிர்பாராமல் இந்த இளைஞர்கள் பக்கம் திரும்புகிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடி பாணியில் சொல்லாமல், நிகழ் காலத்தையும் கடந்த காலத்தையும் இணைத்து விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். தொடக்கத்தில் சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள், போகப்போக கதையின் முடிச்சுகளோடு சேரும்போது சுவாரஸ்யம் கூடுகிறது.

பெங்களூருவின் அசல் அழகையும், அங்கிருக்கும் பல மொழி கலாச்சாரத்தையும் கதாபாத்திரங்கள் வழியாகப் பிரதிபலித்திருப்பது படத்திற்குப் பெரிய பலம்.

சித்து மூலமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் இயல்பான நடிப்பால் சிரிப்பை அள்ளுகிறார்கள். சிக்கலில் மாட்டித் தவிக்கும் போது அவர்கள் செய்யும் கூத்துகள் ரசிக்க வைக்கின்றன.

அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். கீர்த்தனா உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.

சரவணனின் கேமரா பெங்களூரின் வீதிகளையும் இரவுக் காட்சிகளையும் அழகுறப் படம்பிடித்துள்ளது. பிரணவ் கிரிதரனின் பின்னணி இசை பதற்றத்தையும் சிரிப்பையும் சரியாகக் கடத்துகிறது. சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு குழப்பமில்லாத அனுபவத்தைத் தருகிறது. ஜாகுவார் சன்னப்பாவின் சண்டைப் பயிற்சி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

சில இடங்களை சுலபமாக ஊகிக்க முடிந்தாலும், நகைச்சுவையையும் கடத்தல் த்ரில்லரையும் கலந்து கொடுத்த விதத்தில் இந்த ‘கோல்ட் கால்’ ஒரு ஜாலியான ரைட்.

Related Posts