இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி: ‘எம்.எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்பட தொடக்க விழா

இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி: ‘எம்.எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்பட தொடக்க விழா

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுயசரிதையைத் தழுவி உருவாகும் ‘எம்.எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ (M.S. : A LEGACY ON SCREEN) திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை மியூசிக் அகாடமியில் கோலாகலமாக நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். கெளதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

விழாவில் யார் என்ன பேசினார்கள்?

இயக்குநர் கெளதம் தின்னனூரி: மதுரையில் 10 வயதுச் சிறுமியாக இசைப் பயணத்தைத் தொடங்கி, உலகளவில் பெருமை சேர்த்தவர் எம்.எஸ். அம்மா. பாரத ரத்னா விருது, தியாகங்கள், கச்சேரிகள் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர். அவருடைய பக்தி, அர்ப்பணிப்பு ஆகியவற்றை நேர்த்தியாகத் திரையில் கொண்டு வர உண்மையாக உழைப்போம்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி: எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையைப் படமாக்குவது பலரின் நீண்ட காலக் கனவு. இயக்குநர் கெளதம் எழுதிய திரைக்கதையைப் படித்தபோதுதான், அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும் தடைகளும் புரிந்தன. மார்டன் மியூசிக் தரும் அனிருத்துக்கும், எம்.எஸ். அம்மாவாக மாற வேண்டிய ரஷ்மிகாவுக்கும் இது பெரிய சவால்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்: ஏழு எட்டு ஆண்டுகளாக இந்த முயற்சி நடக்கிறது. பல ஆய்வுகளுக்குப் பிறகே இதைத் திட்டமிட்டோம். எம்.எஸ். அம்மாதான் எங்களையும், வேறு வாய்ப்பை விட்டுவிட்டு வந்த இயக்குநர் கெளதமையும் தேர்வு செய்திருப்பார் என நம்புகிறேன். இதற்கு அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு: எம்.எஸ். அம்மாவின் காலம் இசை உலகின் பொற்காலம். நாங்களும் முன்பு இதற்கான முயற்சியை எடுத்தோம். ‘மீரா’ படத்தில் அவரது நடை, உடை, பாவனைகளைக் கவனிக்க வேண்டும். தாத்தா ரமணனின் ஆசியோடு அனிருத் இந்த இசைப் புரட்சியை அகில உலகமும் போற்றும்படி செய்வார்.

நடிகர் சமுத்திரக்கனி: எம்.எஸ். அம்மாவின் 110-வது பிறந்தநாளில் இந்த வரலாற்றுப் படைப்பின் தொடக்க விழாவில் நிற்பது பெருமை. இப்படத்தில் சிறிய பங்களிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி. பல பாகங்களாக எடுக்கும் அளவுக்கு அவரிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

நடிகர் சிவகுமார்: தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறார்கள், அவர்களுக்கு ஒரு சல்யூட். சிறு வயதில் ரேடியோ கூட இல்லாமல் பூங்காவிற்குச் சென்று பாட்டு கேட்ட ஒரு பெண்மணி, இவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்தது மகத்தானது.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்: 10 முதல் 20 வயது வரையிலான கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் இப்படத்தை உருவாக்க உந்துதல். ஜென் ஸீ (Gen Z) தலைமுறையையும் கடந்து வந்த தலைமுறையையும் இசையால் இணைக்கும் பாலம் அனிருத். சிறப்பு விருந்தினராக வந்த கமல்ஹாசனுக்கு நன்றி.

நடிகை ராஷ்மிகா மந்தானா: என் மனதில் இப்போது நன்றி உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. எம்.எஸ். அம்மாவின் குரலில் ஒரு divine power இருக்கிறது. அவரது வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். என் சிறந்த உழைப்பைத் தருவேன்.

நடிகர் கமல்ஹாசன்: எம்.எஸ். அம்மா இசையின் ஒன்றிணைக்கும் சக்தி; தென்னிந்தியாவின் குரல். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என எல்லா மொழிகளிலும் அவரது உச்சரிப்பு உன்னதமானது. ‘ஹே ராம்’ படத்தில் அவரைப் பாட வைக்க ஆசைப்பட்டேன், ஆனால் உடல்நலக்குறைவால் இயலாமல் போனது. எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மூவரிடமும் ஆசி பெற்றிருக்கிறேன்.

பாலச்சந்தருக்கு ‘அரங்கேற்றம்’, கே. விஸ்வநாத்திற்கு ‘சங்கராபரணம்’ போல அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இந்தியாவின் முதல் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம்.எஸ். அம்மாதான். எல்லீஸ் ஆர். டங்கன் சார்பாக படக்குழுவை வாழ்த்துகிறேன். சென்னை மீண்டும் ஒரு சினிமா மையமாக மாறுவது மகிழ்ச்சி; நாம் அனைவரும் ஒன்றிணைந்த திராவிடக் குடும்பம்.