“4000 ஆண்டுகள் வாழும் கேரக்டர்… தமிழ் சினிமாவிற்குப் புதிய வாம்பயர் திரில்லர்!” :’இம்மார்டல்’ விழாவில் ஜி.வி. பிரகாஷ் உற்சாகம்!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா மிக உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் அனைவரும் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்:
நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்: “இது தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள மிக வித்தியாசமான படம். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி கதைக் களம் நகர்கிறது. ஒரு வருடம் தீவிரமாக உழைத்து இதற்கான சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இது ஒரு மிரட்டலான சர்வைவல் திரில்லராகவும் இருக்கும்.
இயக்குநர் மாரியப்பன் சின்னா சொன்ன கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் நகலும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார்.
நாயகி கயாது லோஹர் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். கார்த்தியின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். புதிய திறமைகளான மாரியப்பன் சின்னா மற்றும் அருண்குமார் ஆகியோரின் இப்பெரிய கனவுப் படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து முழு ஆதரவு அளிக்க வேண்டும்.”
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்: “இயக்குநர் மாரியப்பன் சின்னா கதையைக் கூறியபோதே இது ஹாலிவுட் ரேஞ்சில் இருந்தது. வெளிநாட்டு ஸ்டூடியோவில் 7 மாதங்கள் உழைத்து அவர் உருவாக்கிய விஷுவல் மாடலைப் பார்த்த பிறகே எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. ஜி.வி. பிரகாஷ் சார் உள்ளே வந்தது எங்களுக்குப் பிரம்மாண்ட பலம். 3 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்திய அளவில் தொழில்நுட்ப ரீதியாகப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.”
இயக்குநர் மாரியப்பன் சின்னா: “ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டிய சவால் இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கும், கதையைக் கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்ட ஜி.வி. பிரகாஷ் சாருக்கும் நன்றி. தமிழ் தெரியாவிட்டாலும் கடுமையான முயற்சியால் வசனங்களைப் புரிந்து நடித்த நாயகி கயாது லோஹர் மற்றும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.”
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.: “சில படங்கள் செய்யும்போதே அது தனித்துவமாக இருக்கும் எனத் தெரியும். அப்படி எனக்கு மிகவும் பிடித்த படம் இது. தயாரிப்பாளர் அருண்குமார் ஒரு பாசிட்டிவான மனிதர். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இரண்டாம் பாதியில் கலக்கியுள்ளார். படம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.”
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன்: “டிரெய்லரைப் பார்த்தபோதே பிரமிப்பாக இருந்தது. தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எத்தனை படங்கள் நடித்தாலும் ஜி.வி. பிரகாஷின் வேகமும் உழைப்பும் குறைவதே இல்லை. படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள்.”
எடிட்டர் ராஜேஷ்: அனைவரும் இணைந்து மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் உழைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
நடிகர் டி.எம். கார்த்தி & நடிகர் குமார் நடராஜன்: வழக்கமான மாஸ் படமாக இல்லாமல், திரையரங்கில் அனைவரும் ரசித்து அனுபவிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது என்றும், ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் மிஸ் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டனர்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்: “எக்ஸ்பெரிமென்டல் முயற்சியான இக்கதையை ஜி.வி. பிரகாஷ் சார் உடனடியாக ஊக்கப்படுத்தினார். தயாரிப்பாளர் அளித்த முழு சுதந்திரமே படம் இவ்வளவு தரமாக வரக் காரணம்” என்றார்.
சென்னையைச் சேர்ந்த இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் பெண்ணால் ஏற்படும் அமானுஷ்யச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியீட்டில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

