‘அருள்வான்’: கல்வி தேடும் பழங்குடி பறவை! அருளும் முத்துவேல்!

‘அருள்வான்’: கல்வி தேடும் பழங்குடி பறவை! அருளும் முத்துவேல்!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் காடர் மொழி பேசும் பழங்குடியின மக்கள். படிக்க ஆசைப்படும் கிருத்திகா என்ற சிறுமி, அங்குள்ள சூழ்நிலைகளால் முடக்கப்படுகிறாள். அவளது தாத்தாவை ஏமாற்றி, வெற்றுப் பத்திரத்தில் கைநாட்டு வாங்குகிறார் வனத்துறை அதிகாரி ஜான் விஜய். இதனால் மனமுடையும் தாத்தா, படிப்பின் அவசியத்தை பேத்தியிடம் கூறிவிட்டு உயிரை விடுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றவும், தன் கிராமத்திற்குப் பள்ளியைக் கொண்டு வரவும் வீட்டை விட்டு வெளியேறி, கலெக்டரைச் சந்திக்கப் புறப்படுகிறாள் கிருத்திகா. அவளது இந்த லட்சியப் பயணம் வென்றதா இல்லையா என்பதே படத்தின் கதை.

இரண்டாம் பாதியில் கலெக்டர் முத்துவேலாக வரும் அருள்நிதி, ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி, ம|மனதில் நிறைகிறார். நேர்மையான அலட்டல் இல்லாத அதிகாரியாக முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார். அவரது இயல்பான உடல்மொழியும் பேச்சும், இப்படியொரு கலெக்டர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

படத்தின் ஆகப்பெரிய தூணாக நிற்பது சிறுமி கிருத்திகா தான். படிப்புக்காக ஏங்கி, காடர் மொழியில் அவர் வைக்கும் கோரிக்கைகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும். பழங்குடி தம்பதிகளாக வரும் ஆரவ் மற்றும் ரம்யா பாண்டியன் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளனர். வில்லத்தனத்தில் ஜான் விஜய் மிரட்ட, பத்திரிகையாளராக வரும் காளி வெங்கட், விடிவி கணேஷ், சரவணன், வினோதினி ஆகியோர் கதையோட்டத்திற்குத் தகுந்தவாறு கச்சிதமாகப் பங்களித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்திற்குப் பெரும் பலம். பாடல்கள் கதையோடு பயணிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக, மலைவாழ் மக்களின் வலியையும், கிருத்திகாவின் கல்விப் போராட்டத்தையும் உணர்த்தும் காட்சிகளில், அவரது பின்னணி இசை தனி முத்திரை பதித்து நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கிறது.

வேல் செவ்வேல் பாடல் நம்மை ஆட வைக்கிறது..  அல்லிப்பூவே பாடல் நம்மை நெகிழ வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் தன் கேமரா மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலைக் கண்முன்னே கொண்டு வந்துள்ளார். அழகை ரசிக்கும் அதே வேளையில், அங்குள்ள மக்களின் வறுமையையும், குடில்களின் எதார்த்த நிலையையும், அருவிகளின் பிரம்மாண்டத்தையும் ஒருசேரக் காட்டி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

இயக்குநர் கணேஷ் விநாயகன், ஒரு உண்மைச் சம்பவத்தை எந்தவித பாசாங்கும் இல்லாமல் நேர்மையாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

மலைவாழ் மக்கள் முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பதை எதார்த்தமாகக் காட்டிய விதம் சிறப்பு.காடர் மொழி பேசும் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் ஏமாற்றப்படும் வேதனையையும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

மொழியைப் புரிந்துகொள்வதற்காகச் செய்யப்பட்ட தமிழ் டப்பிங் மற்றும் சில இடங்களில் ஆவணப்படம் போன்ற சாயல் தெரிவது சிறு பலவீனமாக இருந்தாலும், இயக்குநரின் சமூக அக்கறையும் மெனக்கெடலும் அதை மறக்கடிக்கச் செய்கின்றன.

மொத்தத்தில்..
‘அருள்வான்’ – வணிக ரீதியான படங்களுக்கு மத்தியில், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், சமூக நீதியையும் உரக்கப் பேசும் ஒரு உன்னதமான படைப்பு. திரையரங்குகளில் தவறவிடக் கூடாத ஒரு நல்ல சினிமா.

 

பாடல்கள்..

Related Posts