திரைத்துறையில் வரலாற்றுச் சாதனை: பட்ஜெட் வாரியான சம்பள முறை அமல்!
தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்திருக்கிறது!
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில், தொழிலாளர் நலனுக்கான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பெப்சியின் கீழ் இயங்கும் 23 சங்கங்களின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில், இந்திய திரையுலகிற்கே ஒரு புதிய முன்மாதிரியை இங்கே உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, இனி படங்களை சிறிய, மத்திமம், பெரிய பட்ஜெட் என மூன்று வகைகளாகப் பிரித்து, அந்தந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த அதிரடி முடிவு தமிழ்த் திரையுலகின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முக்கியமான நிகழ்வில், கலைப்புலி எஸ். தாணு, எஸ். கமலக்கண்ணன், எஸ். கதிரேசன், ஆர். ராதாகிருஷ்ணன், என். சுபாஷ் சந்திர போஸ், சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் டி. சிவா, தனஞ்செயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோரும் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து எடுத்துள்ள இந்தச் சமரச முயற்சி, தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல தொடக்கம்!

