‘சாருகேசி’ : ஸ்வரமா, அபஸ்வரமா?
அதிரடி ஆக்ஷன் மழையில் நனைந்த தமிழ் சினிமாவிற்கு, மனதை உருகவைக்கும் ஒரு பியூர் கிளாசிக்கல் கச்சேரியாக வந்திருக்கிறது இந்த ‘சாருகேசி’. நாடக மேடையில் பல நூறு முறை அரங்கேறி கைதட்டல் வாங்கிய கதையை, இப்போது வெள்ளித்திரையில் கொடுத்திருக்கிறார்கள்!
பல்லவி:
கதைக்களமே ஒரு கம்பீரமான கல்யாணி ராகம் போலத்தான்! இசையைத் தன் மூச்சாகக் கொண்ட ஒரு மூத்த கலைஞருக்கு, வயோதிகமும் அல்சைமர் என்னும் மறதி நோயும் சேரும்போது… அவரும் அவரது குடும்பமும் எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டமே இந்த ‘சாருகேசி’. ராகத்தின் பெயரிலேயே படத்தின் ஆன்மா ஒளிந்திருப்பதால், ஆரம்பமே நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகிறது.
அநுபல்லவி:
நாயகன் ஒய்.ஜி.மகேந்திரன் திரையில் தோன்றும்போதே ஒரு சங்கராபரண ராகத்தின் கம்பீரம் தொற்றிக்கொள்கிறது. ஊரெல்லாம் புகழும் கர்நாடக இசைப் பேரரசர் அவர். பாசமான மனைவி, அன்பான தம்பி என சுற்றிலும் அரவணைப்பு இருந்தாலும், மகனும் மருமகளும் காட்டும் புறக்கணிப்பு அவர் நெஞ்சில் ஆறாத வடு!
அந்த ஏமாற்றத்தை அவர் எதிர்கொள்ளும் இடங்களிலும், மனைவி மீது பொழியும் பாசத்திலும் நடிப்பு அசுரன்! குறிப்பாக, மறதி நோய் தாக்கிய பிறகு அவர் அப்படியே ஒரு பச்சிளம் குழந்தையாக மாறும் காட்சிகளில்… அடடா, உருகாத நெஞ்சமும் உருகுமே! அப்படியே ஒரு மென்மையான ஆனந்தபைரவி ராகமாய் நெஞ்சைக் கறைகிறார் ஒய்.ஜி.எம்!
சரணம்:
ஒய்.ஜி.எம்-மின் மனைவியாக வரும் சுஹாசினி, அக்மார்க் தோடி ராகம் போல அத்தனை கணவடிவம்! கணவன் மீது அவர் காட்டும் அசாத்திய பாசமாக இருக்கட்டும், மகனின் சுயநலக் குணத்தைப் பொறுக்க முடியாமல் அந்தப் பெரிய ‘ரகசியத்தை’ உடைக்கும் இடமாக இருக்கட்டும்… நடிப்பில் முத்திரை பதிக்கிறார். அங்கே தியேட்டரே நிசப்தமாகி, சுஹாசினியின் நடிப்பு மட்டுமே தனி ஆலாபனையாக ஒலிக்கிறது!
உடன் வரும் தலைவாசல் விஜய் கதையின் சுதி விலகாமல் பார்த்துக் கொள்ளும் தம்பூரா என்றால், சாமியாராக வரும் சத்யராஜ் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் மிருதங்கம் போல கச்சிதம்!
சங்கதிகள்:
ஒரு இசைக் கலைஞரின் கதைக்கு இசைதானே ஜீவநாடி? ‘தேனிசைத் தென்றல்’ தேவா, இந்த முறை ‘செவ்வியல் தென்றலாக’ மாறி சாருகேசி ராகத்திலேயே மெட்டமைத்திருக்கிறார்! பாரம்பரிய இசையின் செழுமையும் கெடாமல், தற்கால ரசனைக்கு ஏற்றவாறும் பாடல்களைச் செதுக்கியிருக்கிறார். நாயகனின் மறதி மற்றும் தவிப்பை விவரிக்கும் எமோஷனல் காட்சிகளில், தேவாவின் பின்னணி இசை நம் இதயத் துடிப்பை அப்படியே பிரதிபலிக்கிறது!
ஸ்வரம்
-
ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி உள்ளிட்டோரின் நடிப்பு, தேவாவின் கிளாசிகல் இசை.
அபஸ்வரம்
-
நாடகப் பாணி மேக்கிங், மிகச் சில லொகேஷன்கள், மெதுவான திரைக்கதை
மங்களம்:
பாட்ஷா, அண்ணாமலை என அதிரடி ஆக்ஷனில் தில்லானா பாடிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இந்த முறை அமைதியான ஒரு நீலாம்பரி ராகமாய் தாலாட்டுகிறார். நாடகப் பாணி கதையை, சஞ்சய்யின் கேமரா கோணங்களின் துணையோடு, முடிந்தவரை சுவாரசியமான திரைப்படமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.
‘சாருகேசி’: இசையையும், குடும்பப் பிணைப்பையும் நேசிக்கும் ரசிகர்களின் இதயங்களை வருடிச் செல்லும் ஒரு வசந்தகாலக் கச்சேரி! தாராளமாகக் கேட்கலாம், ரசிக்கலாம்!

