“துணிச்சலின் குரல்..!”: கே.ராஜன் படத்திறப்பு நிகழ்வில் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

“துணிச்சலின் குரல்..!”: கே.ராஜன் படத்திறப்பு நிகழ்வில் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

மிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான மறைந்த கே. ராஜன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் திருவுருவப் படத் திறப்பு விழா சென்னையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்விற்கு, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கினார்.

திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு மறைந்த கே. ராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினரின் நெகிழ்ச்சியான புகழஞ்சலி

சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமாவின் நல்வாழ்விற்காகவும் இறுதிவரை துணிச்சலுடன் குரல் கொடுத்த கே. ராஜன் அவர்களின் பங்களிப்பை விழாவில் பங்கேற்றவர்கள் கண்ணீருடன் நினைவு கூர்ந்தனர்.

டாக்டர் ஐசரி கே. கணேஷ்:

“ராஜன் மாமாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும், எங்கள் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. என் தந்தையும் அவரும் பள்ளித் தோழர்கள். வடசென்னையில் அவர் பள்ளி நடத்தியதை பார்த்துவிட்டு, என் தந்தையிடம் கல்வி நிறுவனம் தொடங்க ஊக்கமளித்தார். இன்று நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்துவதற்குக் காரணமே அவர்தான்.

பத்தொன்பது வயதில் என் தந்தையை இழந்த பிறகு, ராஜன் மாமாவைத்தான் என் அப்பாவாகப் பார்த்தேன். எத்தனையோ பெரிய அறுவைச் சிகிச்சைகளைத் துணிச்சலாக எதிர்கொண்டவர், ஒரு சிறிய பேஸ்மேக்கர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் இப்படி மறைவார் என நினைக்கவில்லை. அவர் இல்லை என்றாலும், அவர் சங்கத்திற்கு என்ன செய்ய நினைத்தாரோ, அதை நான் நிச்சயமாகச் செய்வேன்.”

தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு:

“தயாரிப்பாளர்களின் நன்மைக்காக அவர் எடுத்து வைத்த வாதங்கள் எண்ணிலடங்காதவை. திருட்டு விசிடிக்கு எதிராகச் சட்டை இல்லாமல் அவர் போராடிய துணிச்சல் யாருக்கும் எளிதில் வராது. நான் படித்த பள்ளியில் அவர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கும் ஐசரி கணேஷுக்கும் இடையே இருந்த அன்யோனியமான மாமா-மருமகன் உறவு மிக அழகானது. ஐசரி கணேஷ் பல சூழ்நிலைகளில் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மாபெரும் இழப்பு.”

நடிகர் & தயாரிப்பாளர் அருண் பாண்டியன்:

“அண்ணன் கே. ராஜனுக்காக எந்தச் சூழ்நிலையிலும் நான் முன்னிற்பேன். பல பிரச்சினைகளில் அவரோடு நின்றிருக்கிறேன். எந்த சபையாக இருந்தாலும், தவறுகளைத் தைரியமாகத் தட்டிக்கேட்பார். சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைக் காண்பது அரிது. இந்த நினைவேந்தல் கூட்டத்தை ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்.”

மகள் ராஜேஸ்வரி அன்பு:

“துணிச்சல், நேர்மை, போராடும் குணம் கொண்டவர்தான் தமிழன் என்பார்கள். அப்படி ஒரு தமிழனாக எங்கள் அப்பா வாழ்ந்தது எங்களுக்குப் பெருமை. எவ்வளவு பெரிய மேடையாக இருந்தாலும் பயமின்றிப் போராடுவார். நான் தளர்ந்தபோதெல்லாம் எனக்குத் தைரியம் கொடுத்தவர்.

ஐசரி கணேஷ் அவர்கள் என் அப்பாவை ஒரு தாய் மாமனாகக் கருதி, கடைசி வரை செய்த உதவிகளை யாராலும் செய்ய முடியாது. மற்றவர்களுக்கு நல்லது செய்யும் குணம் கொண்ட என் அப்பாதான் எனக்கு என்றும் முதல் ஹீரோ.”

எந்த மேடையிலும் உண்மையை உரக்கப் பேசும் கே. ராஜன் அவர்களின் குணம், தமிழ் சினிமா வரலாற்றிலும், சுயாதீனப் படைப்பாளர்களின் மனங்களிலும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய திரையுலகினர் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.