சம்ஹாரம்: ‘ஒன் நைட்’ த்ரில்லர் ஆட்டம்!
விடிஞ்சா கல்யாணம், ஆனா பொண்ணுக்கு சுத்தமா இஷ்டமில்ல! ஏன்னா, மாப்பிள்ளை குடிகார ரவுடி. தங்கச்சியோ வேறொரு லவ்வர் கூட ஓட பிளான் போடுறா. இதைக் கண்டுபிடிச்சு அண்ணன் அவளை அறைக்குள்ள பூட்டி வைக்க, அவளோ நைசா லவ்வர வீட்டுக்குள்ள வரவழைக்கிறா. அதே சமயம் சைடில் மாப்பிள்ளை ரவுடியும் உள்ளே நுழைய, கூடவே இன்னும் ரெண்டு பேரும் எதேச்சையா வந்து தங்குறாங்க. இவங்க போதாதுன்னு நடுராத்திரியில ‘முகமூடி போட்ட மர்ம நபர்’ ஒருத்தனும் திடீர்னு என்ட்ரி கொடுக்குறான்!
ஒரே வீட்டுக்குள்ள இத்தனை பேரு… அதுவும் ஒரே நைட்டுல… அடுத்து என்ன நடக்கும்? அந்த முகமூடி ஆசாமி யார்? இதுதான் ‘சம்ஹாரம்’ படத்தோட மொத்த ஜாதகமும்!
யார் யார் எப்படி?
-
பிரஜின்: அண்ணனாக, கதையின் நாயகனாக வந்து வழக்கம்போல நீட்டாக நடித்திருக்கிறார். ஆனால், தேவையில்லாத மாஸ் ஹீரோ பில்டப் காட்சிகளைத் தவிர்த்து, முழுக்க முழுக்க கதையை மட்டுமே தாங்கிப் பிடித்திருந்தால் இன்னும் நச்சென்று இருந்திருக்கும்.
-
ஷருமிஷா: படத்தோட ரியல் ஸ்கோரர் இவர்தான்! லவ்வருக்காக ஏங்குறது, பயப்படுறது, தவிக்கிறது என காதல் டூ பயம் வரை அத்தனை எக்ஸ்பிரஷன்களிலும் அள்ளுகிறார்.
-
வில்லன் & டீம்: வில்லனாக வரும் கணேஷ் சாவரட்டில், பார்ப்பதற்கு தேவையான அளவுக்கு மிரட்டல் லுக் கொடுத்திருக்கிறார். மற்ற குணச்சித்திர நடிகர்களும் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

பிளஸ்
-
வெற்றிப் புள்ளி: கம்மி பட்ஜெட், குறைவான கேரக்டர்கள், ஒரே ஒரு லொகேஷன். இதை வச்சுக்கிட்டு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரைக்கதை அமைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா. ஃபர்ஸ்ட் ஹாஃபில் அள்ளி வீசிய சந்தேகங்களுக்கு செகண்ட் ஹாஃபில் முடிச்சுகளை அவிழ்த்த விதம் செம சுறுசுறுப்பு. முக்கியமாக க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்திற்குப் பெரிய பலம்!
-
டெக்னிக்கல் க்ரூ: நைட்டுல நடக்குற கதை என்பதால் சுரேஷ்குமார் சுந்தரத்தின் கேமரா லைட்டிங் அந்தப் பதற்றத்தை அப்படியே கடத்துகிறது. வி.ஜி. ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசை அந்த முகமூடி சீன்களிலெல்லாம் திக் திக் உணர்வைக் கூட்டியிருக்கிறது.
மைனஸ்
-
ஆமை வேக ஆரம்பக் காட்சிகள், ஒரே வீட்டில்பெரும்பாலான காட்சிகள், பட்ஜெட்டுக்கு ஏத்த த்ரில்லர் கதையா கொண்டு போகாம, ஹீரோவுக்காக வைக்கப்பட்ட ஓவர் பில்டப் காட்சிகள்
ஃபைனல் பஞ்ச்
வழக்கமான அதிரடி ஆக்ஷன் மசாலாக்களை எதிர்பார்க்காமல், ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்ற சீட் எட்ஜ் சஸ்பென்ஸ் அனுபவத்தை விரும்பும் த்ரில்லர் பிரியர்கள், இந்த ஒரு இரவு மர்மப் பயணத்தை தாராளமாக ரசிக்கலாம்!

