ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த அதிரடி! உலக அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் “பொருநை”!
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம், துருக்கியில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது! தொல்லியல் மற்றும் பண்பாட்டுத் துறையில் உலக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் என்ற வரலாற்றுச் சாதனையையும் இது படைத்துள்ளது!
‘தமிழி’ டூ ‘பொருநை’ – தமிழன்டா இயக்கத்தின் அசுரப் பயணம்!
ஏற்கனவே, ஹிப்ஹாப் தமிழாவின் ‘தமிழன்டா இயக்கம்’ கடந்த 2019-ல் தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை வெளியிட்டு செம்ம ஹிட் அடித்தது. சுமார் 20,000 கிலோமீட்டர் பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து உருவாக்கப்பட்ட அந்தத் தொடரைத் தொடர்ந்து, இப்போது அவர்களின் அடுத்த பிரம்மாண்ட முன்னெடுப்பாக உருவெடுத்துள்ளதுதான் இந்த பொருநை ஆவணப்படம்.
அறிவியல்பூர்வ ஆதாரம்… பல்லாண்டுகள் உழைப்பு!
தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 காலகட்டங்களில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை அக்குவேறு ஆணிவேறாகப் படம் பிடித்துள்ளது இந்த ஆவணப்படம்.
சும்மா அவசர அவசரமாக எடுக்காமல், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மீதான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளிவரும் வரை பொறுமையாகக் காத்திருந்து, எல்லாத் தரவுகளையும் பக்காவாகத் தொகுத்து, பல்லாண்டுகள் கடின உழைப்பில் மிக சுவாரஸ்யமாக இதை உருவாக்கியுள்ளனர். சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் எந்தவிதத் தடையும் இல்லாமல் “யு” (U) சான்றிதழ் வழங்கியுள்ளது.
திரைமறைவில் உழைத்த ‘பொருநை’ கூட்டணி!
-
தயாரிப்பு, பின்னணிக் குரல் & இசை: ஹிப்ஹாப் தமிழா (ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட்)
-
இயக்கம்: பிரதீப்குமார் – இளங்கோ சம்பத்குமார்
-
ஒளிப்பதிவு: சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ்
-
படத்தொகுப்பு (Editing): திலகேஷ், பரத்பாலாஜி
அக்டோபரில் உலக மேடையில் தமிழ் முரசு!
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், முதற்கட்டமாக வரும் அக்டோபர் மாதம் துருக்கியில் நடைபெறவுள்ள சர்வதேசத் திரைப்பட விழாவில் உலகத் திரை ஆர்வலர்களின் முன்னிலையில் திரையிடப்படவுள்ளது.
கீழடி, பொருநை என நம் தமிழ் மண்ணின் பழம்பெரும் வரலாற்றை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ‘பொருநை’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிகின்றன! தமிழன்டா!

