29: விமர்சனம்: அடையாளத்தைத் தேடும் காதல் பயணம்

29: விமர்சனம்: அடையாளத்தைத் தேடும் காதல் பயணம்

“என்னை நான் தேடித்தேடித்தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்” என்கிற பாலியல் ஈர்ப்பைத் தாண்டி, சக மனிதர்கள் மீது.. ஏன், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மீதான பற்றுதான் காதல் என்பதைச் சொல்லும் காவியம்.

சாதி, மதம், நாடுதான் தனது அடையாளமா.. தனக்கான அடையாளம்தான் என்ன என்ற கேள்வியோடு வலம் வரும் இளைஞன், சத்யா. (நல்லவேளை மொழியைச் சேர்க்கவில்லை.. பிரச்சினை வந்திருக்கும்..!) சொந்த ஊரில் இருந்து வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வருகிறான். அங்கே விஜியுடன் காதல். காதலன் என்பதே தனது அடையாளம் என வாழ்கிறான். ஐ.ஏ.எஸ். கனவுடன் இருக்கும் விஜிக்கு இது உடன்பாடாக இல்லை.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் லாஜிக் இல்லாத கதை.

‘கற்றது தமிழ்’ படத்தில் ஒரு வசனம் வரும்: “சினிமாலதான் லாஜிக். வாழ்க்கையில இல்லே..” என்று.

அந்த மாதிரியான – ஈர்க்கவைக்கும், நெகிழ வைக்கும், நம்ப வைக்கும் – லாஜிக் மீறல் இது.

விது, காதலன் சத்யாவாக வருகிறார். திகட்டும் அளவுக்குக் காதலை அள்ளி அள்ளித் தருகிறார். காதல் பிரிவுக்குப் பிறகு இன்னொரு உருவம் எடுக்கிறார். அம்மாவுடனான மோதல், காதலியிடம் எதிர்பார்க்கும் அங்கீகாரம் என இயல்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, தான் யார் எனப் பற்பல இளைஞர்களுக்கு வரும் குழப்பத்தைச் சிறப்பாக வெளிக்காட்டி இருக்கிறார்.ப்ரீத்தி அஸ்ரானி,  காதலி விஜியாக வருகிறார். காதலன் மீது ஈர்ப்பு இருந்தாலும், “ஏய்.. வெளிப்படையா சொன்னா நீ ஆம்பள, நான் பொண்ணு. அவ்வளவுதான். இதை மீறி அடையாளம் வேணும்” என்கிற கோணத்தில் அவர் பேசும் காட்சி.. அவரது சிறந்த நடிப்புக்கு ஓர் உதாரணம். படம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது இவரது சிறந்த நடிப்பு.

ஆதிரா பாண்டிலட்சுமி,  நாயகனின் அம்மாவாக நடித்து இருக்கிறார். பொது இடத்தில் குப்பை கண்டால் அகற்றுவது, மரத்தை வெட்டி ரோடு போட எதிர்ப்பு தெரிவிப்பது என இயற்கை மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரம். அதே நேரம் மகனிடம் கொண்ட கோபத்தைக் குறைக்காத தாய்! அற்புத நடிப்பு. அதுவும், சிறைச்சாலையில் மகனைச் சந்தித்த பிறகு வலுக்கட்டாயமாகப் புன்னகையைப் போர்த்திக்கொள்ள முயற்சிக்கும் காட்சியில் இன்னும் ஈர்க்கிறார்.

அவினாஷ்,  நாயகனின் நண்பனாக வந்து கொஞ்சம் சிரிக்கவும், நிறையவே நெகிழவும் வைக்கிறார். மாஸ்டர் மகேந்திரன், வில்லனாக வந்து போகிறார்.

ஷான் ரோல்டன், இதமான இசை மனதை வருடுகிறது. குறிப்பாக, ‘சீலே சீலே’, ‘பொல்லாத ஆசைகள்’ போன்ற பாடல்கள் காதலின் உன்னதத்தை உருகி உருகிச் சொல்கின்றன. ஆனால் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். குறைக்கலாம்.

பின்னணி இசையிலும் ஜாலம் புரிந்திருக்கிறார் ஷான். உணர்வுப்பூர்வமான காட்சிகளைத் தனது இசையால் இன்னும் நெருக்கமாக்குகிறார்.

மாதேஷ் மாணிக்கம்,  2010-களின் சென்னையை மிக அழகாகக் காட்டியுள்ளார். குறிப்பாக, கடற்கரை காட்சிகள் மற்றும் இரவு நேரக் காட்சிகள் அபாரம். ஒவ்வொரு பிரேமும் ஒரு வண்ணமயமான ஓவியம் போலத் திகழ்கிறது.ஆர்.எஸ். சதீஷ்குமார், எடிட்டிங்கில் கொஞ்சம் கூடுதலாகக் கத்திரி போட்டிருக்கலாம்.

சண்முக ராஜா, கலை இயக்கம் சிறப்பு. அந்தக்கால நோக்கியா போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் எனச் சிறிய விஷயங்களில் கூட ரெட்ரோ உணர்வைக் கொண்டு வந்து டைம் மிஷினில் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்.

ரத்னகுமார்,  ‘மேயாத மான்’ படத்தில் துள்ளலான காதலைச் சொன்னவர். இதில் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மீதான காதலை, இரு உயிர்கள் வழியே நமக்குள் கடத்தி இருக்கிறார்.

“தான் யார் என்ற கேள்வியுடன் வலம் வரும் இளைஞன்.. பிறகு ஏன் காதல் காட்சி.. தொடர்பு இல்லாமல் ஏரி – ஆக்கிரமிப்பு.. இப்படிப் போகிறதே..” என்று யோசிக்கும் போது.. அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து, நாம் யார் என்கிற கேள்வியை மனதுக்குள் விதைத்துவிடுகிறார்.

“வெறுங்கையாவே வரத்தெரியாதா உனக்கு” என்று நாயகனிடம் நாயகி கேட்பதற்கான அர்த்தம், முழுதாய் புரியும்போது கசிந்து உருகுகிறது மனம்.

உலகில் மிக அழகானது, உன்னதமானது.. தேடல்!

அதைச் சொல்லி இருக்கிறது, 29!

ரேட்டிங் தேவையில்லை!

– டி.வி.சோமு

Related Posts