சர்வதேச மேடையில் தமிழ் பாப் புயல் தீ-யின் ‘வாரி வாரி’ ரிலீஸ்!

சர்வதேச மேடையில் தமிழ் பாப் புயல் தீ-யின் ‘வாரி வாரி’ ரிலீஸ்!

லகப் புகழ் பெற்ற எட் ஷீரன், வோண்டாகர்ள் என சர்வதேச இசை ஜாம்பவான்களுடன் கைகோர்த்து வந்த பாப் நட்சத்திரம் தீ , இப்போது தனது புத்தம் புதிய ஆல்பமான ‘வாரி வாரி’   மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

ஒரு எமோஷனல் மேஜிக்!

ஆஸ்திரேலியா மற்றும் தமிழகத்தின் அடையாளமாக உலகளாவிய கவனம் ஈர்த்து வரும் தீ, இந்த முறை ரசிகர்களின் மனதை உருக்கும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பாடலைத் தந்துள்ளார். “இந்த பாடல் தொலைந்து போன ஒரு உணர்வைப் பற்றியது; நம்மை விட்டுப் பிரிந்த ஒருவரை அல்லது நம்மிடமே நாம் தொலைத்த ஒரு விஷயத்தை மீண்டும் தேடும் தேடல் இது” என இந்தப் பாடலின் ஆன்மாவை விளக்குகிறார் தீ.

மெகா கூட்டணி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா மற்றும் ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் இணைந்து தொடங்கிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த சர்வதேச கூட்டணியின் முதல் அதிரடியாக ‘வாரி வாரி’ வெளியாகியுள்ளது.

‘கிளாசிக்’ காம்போ!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையமைப்பில், கவிஞர் விவேக் வரிகளில் உருவான இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற இசைக்கும் நவீன பாப் இசைக்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. தீ-யின் அந்த காந்தக் குரல் (Alto voice) நம்மை அப்படியே கட்டிப்போடுகிறது.

உலகத் தரத்தில்…

‘ரவுடி பேபி’ மூலம் 150 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து சாதனை படைத்த தீ, இப்போது ஹெச் அண்ட் எம் (H&M) போன்ற சர்வதேச பிராண்டுகளின் முகமாகவும் ஜொலித்து வருகிறார். கிவோன் (GIVĒON) போன்ற ஆப்ரோ-பாப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தோடு, தமிழ் பாப் இசையை உலக வரைபடத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

‘வாரி வாரி’ – இது தமிழ் மண்ணின் மணம் மாறாத, நவீன உலகின் துடிப்புமிக்க ஒரு இசை அனுபவம்!

பாடலைக் காண: https://youtu.be/B2uqmomb1Cs