பிரேக்ஃபாஸ்ட்: அவசரக் காதலும் ஆறாத காயங்களும்!

பிரேக்ஃபாஸ்ட்: அவசரக் காதலும் ஆறாத காயங்களும்!

ன்றைய மின்னல் வேக உலகில், சமூக வலைதளத்தில் ஹலோ சொல்வதிலிருந்து கல்யாணம் வரை எல்லாமே ‘இன்ஸ்டன்ட்’ ஆகிவிட்டது. அப்படி அவசர கதியில் மலரும் காதலும், அதைவிட அதிவேகத்தில் கசந்து போகும் மணவாழ்க்கையும் தான் இந்தப் படத்தின் மையக்கரு.

கதை:

தொழிலதிபர் மகள் ரோஸ்மின், வேலை தேடி அலையும் கிராமத்து இளைஞன் ராணவுக்கு தன் நிறுவனத்திலேயே வேலை தருகிறார். நட்பு காதலாகி, தந்தையின் எதிர்ப்பையும் மீறி கல்யாணத்தில் முடிகிறது. கணவனை எம்.டி ஆக்கி அழகு பார்க்கும் ரோஸ்மின், காதலித்த காலத்தில் காட்டிய அதே அன்பை திருமணத்திற்குப் பின் காட்டுகிறாரா? பணத்திமிரும், ஈகோவும் நுழையும்போது அந்த காதல் என்னவாகிறது? பிரியத் துடிக்கும் இந்த ஜோடி மீண்டும் சேர்ந்தார்களா என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.நடிப்பு:

  • ராணவ் – ரோஸ்மின்: குடும்பத்திற்காக ஏங்கும் மகன், மனைவியின் மேலாதிக்கத்தால் தவிக்கும் கணவன் எனப் பல பரிமாணங்களை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார், ராணவ். திமிரான நடிப்பில் கவனிக்க வைக்கிறார் ரோஸ்மின்.

  • கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத்: அஞ்சாதே திரைப்படத்தில் உணர்ச்சிகரமான  ப்ளஸ் டூ சிறுவனாக அனைவரையும்  ஈர்த்த கிரித்திக் மோகன், இதில் அசத்தலான கணவன் கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார். நடிப்புத் திறமையும் இளமைத் துள்ளலும் இவரது ப்ளஸ்கள். அமிதா ரங்கநாத்தும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

  • மூத்த கலைஞர்கள்: சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா என அனுபவ நடிகர்களின் பங்களிப்பு படத்திற்குப் பெரும் பலம்.

தொழில்நுட்பம்:

  • ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வத்தின் கேமரா கணக்கீடுகள் படம் முழுக்க வண்ணமயமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

  • இசை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, எப்போதும் போல் ரசிக்கவைக்கிறது. அந்தந்த படங்களுக்கு ஏற்ப,  ஒரு கதாபாத்திரமாகவே தனது இசையை உலவவிடுவது ஜி.வி.யின் வழக்கம். இதிலும் அதை நேர்த்தியாக செய்து இருக்கிறார்.

  • படத்தொகுப்பு: கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் சிதைக்காமல் கடத்தியதில் எடிட்டர்கள் பாஸ்கர் மற்றும் சுஜித்தின் உழைப்பு தெரிகிறது.

இயக்கம்:

இயக்குநர் ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா, இன்றைய இளைஞர்களின் அவசரக் காதல் கலாச்சாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால், பிரிவிற்கான காரணமாக அவர் சொல்லியிருக்கும் விஷயம் பழைய பாணியிலேயே உள்ளது. இன்றைய காதலைப் பற்றி அதிகம் பேசாமல், குடும்பப் பிரச்சனையை நோக்கித் திரைக்கதை நகர்வது வேகத்தைக் குறைக்கிறது. ஆனாலும், தம்பதிகளுக்கான அறிவுரை மற்றும் வசனங்கள் ரசிகர்களைச் சிந்திக்க வைக்கும்.

மொத்தத்தில்..

 இந்த ‘பிரேக்ஃபாஸ்ட்’ மணவாழ்க்கையில் ஏற்படும் பிரிவுகளைத் தள்ளிப்போட வைக்கும்!

ரேட்டிங்: 3.7/5