‘காலனி’ ஃபர்ஸ்ட் லுக்: போராளித்தாய் ஆன, தாய்க்கிழவி!

‘காலனி’ ஃபர்ஸ்ட் லுக்:  போராளித்தாய் ஆன,  தாய்க்கிழவி!

‘அறம்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கோபி நயினார், இப்போது மீண்டும் ஒரு அதிரடியான சமூகப் படைப்போடு வந்துவிட்டார். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலனி’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

கனல் தெறிக்கும் கலையரசி!

‘தாய்கிழவி’ படத்தின் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ‘கலையரசி’ ராதிகா, இப்படத்தில் மீண்டும் ஒரு வலிமையான மையக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

தன் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் ஒரு தாயின் உணர்ச்சிப் போராட்டமே இப்படத்தின் கதைக்களம். போஸ்டரில் கண்களில் கோபமும், மனதி உறுதியுமாக ராதிகா அமர்ந்திருக்கும் தோற்றம், படம் சொல்லப்போகும் ஆழமான அரசியலை இப்போதே பறைசாற்றுகிறது.

நிஜங்களின் நிழலாட்டம்!

பின்னணியில் கலவரச் சூழல், பொதுமக்களை விரட்டும் போலீஸ் என போஸ்டரே ஒரு போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. ‘அறம்’ படம் எப்படி ஒரு சாமானியனின் வலியைப் பேசியதோ, அதேபோல ‘காலனி’ படமும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தில் ராதிகாவின் மகனாக லியோ அறிமுகமாகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், சேத்தன் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது.

மீண்டும் தேனிசைத் தென்றல்!

இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருப்பதுதான். அவரது இசை இப்படத்திற்குப் பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் இணைந்து ஒரு தரமான சினிமாவை உறுதி செய்துள்ளன.

விரைவில் திரையில்!

திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிதி மூவிஸ் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்ட ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘காலனி’, விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் மூலமாக வாசலக்கதவுகளைத் தட்ட வருகிறது.

நிச்சயமாக, கோபி நயினாரின் இந்த ‘காலனி’ ரசிகர்களின் மனசாட்சியைத் தட்டும் ஒரு முக்கியப் படைப்பாக அமையும்!

Related Posts