கொலைச்சேவல்: திரைவிமர்சனம்: ரத்தமும்… ரணமும்!
ஆர்.பி. பிலிம்ஸ் தயாரிப்பில், துதிவாணன் இயக்கத்தில், நம்ம ‘மெட்ராஸ்’ கலையரசன், தீபா பாலு, பாலா சரவணன், கஜராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியிருக்கும் படம் தான் இந்த ‘கொலைச்சேவல்’.
கதை என்ன?
பார்க்காமலே மலரும் ‘செல்போன்’ காதல்! ஜாதி வேற, ஊரு வேறன்னு இருந்தாலும், காதலில் ஜெயிக்க நினைக்கிறார்கள் கலையரசனும் தீபா பாலுவும். வீட்டின் எதிர்ப்பை மீறி ‘கைபிடித்து’, வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். தீபா பாலு கர்ப்பமாக, பிறக்கப்போகும் வாரிசுக்காகக் குலதெய்வம் கோயிலுக்குப் புறப்படுகிறார்கள். அந்தப் பயணத்தில் இவர்களைத் துரத்தும் அந்த ‘கொடூரச் சம்பவம்’ என்ன என்பதுதான் இந்தச் சேவலின் ஆட்டம்!
நடிப்பு எப்படி?
-
கலையரசன்: எப்போதுமே எதார்த்தமான ஆக்டிங் தான் இவருக்கு ப்ளஸ். இதிலும் குறை வைக்கவில்லை. ஆனால், இவருடைய அசுரத்தனமான திறமைக்குத் தீனி போடும் அளவுக்குத் திரைக்கதையில் வலுவில்லாதது ஏமாற்றமே!
-
தீபா பாலு: அறிமுகப் படத்திலேயே அசத்தியிருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக அழகிலும் சரி, நடிப்பிலும் சரி… ஒரு ‘நச்’ ரகம். ஆனால், முதல் படமே இவ்வளவு ‘டார்க்’ சப்ஜெக்ட்டா என யோசிக்க வைக்கிறார்.
-
பாலா சரவணன் & கஜராஜ்: பாலா சரவணன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார், கிளைமாக்ஸில் குணச்சித்திர நடிப்பால் கவனிக்க வைக்கிறார். கஜராஜ் பேசும் வசனங்களை விட, அவரது முகபாவனைகளே ஜாதிய வெறியைப் பிரதிபலிக்கின்றன.
டெக்னிக்கல் டச்
சந்தனின் இசை சில இடங்களில் திக் திக் நிமிஷங்களைக் கொடுத்தாலும், இது த்ரில்லரா? இல்ல பேய் படமா? என ஆடியன்ஸை சில நேரம் கன்பியூஸ் செய்கிறது. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் ‘ஷார்ப்’ ஆக இருந்திருக்கலாம்!
இயக்கம் & திரைக்கதை
ஆணவக் கொலை எனும் சமூக அவலத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் துதிவாணன். நோக்கம் சரிதான், ஆனால் சொல்ல வந்த விதம்? முதல் பாதி எங்கே செல்கிறது என்றே தெரியாமல் ஒரு முடிவில்லாத பயணமாக நீள்கிறது.
இரண்டாம் பாதியில் கதை சூடுபிடித்தாலும், அந்தப் பாதகச் செயல்களைக் காட்சிப்படுத்திய விதம்… ‘அப்பாடா’ எனப் பார்க்க முடியாமல் ரத்தமும் கொடூரமுமாக இருக்கிறது. தியேட்டருக்குப் பொழுதுபோக்க வரும் ரசிகர்களுக்கு இது ஒருவிதமான மன அழுத்தத்தையும், எரிச்சலையுமே தருகிறது.
📢 ஃபைனல்பஞ்ச்:
நல்ல நடிகர்கள், கனமான கருப்பொருள் என்பது பலம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால்கூடுதலாக ஈர்த்திருக்கும்
