செகன்ட் கேஸ் ஆப் சீதாராம்: விமர்சனம்: அனல் பறக்கும் இன்வெஸ்டிகேஷன்!
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி பகுதியில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் உள்ளூர் போலீஸ் திணறிக்கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கமும் இந்த விவகாரத்தை அமுக்கப் பார்க்கிறது. இந்தச் சூழலில்தான், ஒரு கூர்மையான அதிகாரியாகக் களமிறங்குகிறார் சீதாராம்.
இந்தத் தொடர் மரணங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு மெல்லிய தொடர்பை அவர் மோப்பம் பிடிக்கிறார். துப்பு துலக்கத் தொடங்கும்போதுதான் தெரிகிறது, இது ஏதோ தனிப்பட்ட கொலைகள் அல்ல; இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி வலை ஒளிந்திருக்கிறது என்பது.
ஒவ்வொரு அடியிலும் சீதாராமுக்கு முட்டுக்கட்டைகள் விழுகின்றன. ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால், சற்றும் தளராத சீதாராம், காணாமல் போன அந்த ரகசிய டைரியையும், சாட்சிகளையும் வைத்து குற்றவாளியின் கழுத்தை நெருங்குகிறார்.
யார் அந்தப் பின்னணி மனிதர்கள்? சீதாராம் அந்தச் சதியை எப்படி முறியடித்தார்? அந்த மர்ம மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? என்பதை மிக விறுவிறுப்பாகவும், எதிர்பாராத திருப்பங்களோடும் சொல்லியிருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை!
நடிகர்கள்:
:
படத்தின் நாயகன் சீதாராம் கதாபாத்திரத்தில், விஜய ராகவேந்திரா. ஒரு கூர்மையான போலீஸ் அதிகாரியாகக் கச்சிதமாகப் பொருந்துகிறார். நிதானமான உடல்மொழி, எதற்கும் கலங்காத கண்கள் என இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக, ஆதாரங்களை அவர் ஒவ்வொன்றாகச் சேர்க்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.
இவரது தங்கையாக வரும் உஷா பண்டாரி, செபாஸ்டியன் என்கிற கதாபாத்திரத்தில் வரும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
இசை:
த்ரில்லர் படங்களின் உயிர்நாடியே பின்னணி இசைதான். இப்படத்தின் இசையமைப்பாளர் நவனீத் ஷாம், விறுவிறுப்பான காட்சிகளுக்குத் தனது பின்னணி இசையால் கூடுதல் பலம் சேர்த்துள்ளார். குறிப்பாக, கிளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளிலும், மர்மம் விலகும் இடங்களிலும் பின்னணி இசை நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது.
ஒளிப்பதிவு:
ஒளிப்பதிவாளர் ஹேமந்த், மலைக்கிராமத்தின் அழகையும், அதே சமயம் அந்த ஊருக்குள் ஒளிந்திருக்கும் ஒருவித அச்சத்தையும் தனது கேமரா கண்களால் அழகாகப் படம்பிடித்துள்ளார். இரவு நேரக் காட்சிகளும், காட்டுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகளும் மிகத் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒளியமைப்பு (Lighting) படத்தின் மூடைச் சரியாகப் பிரதிபலிக்கிறது.
இயக்கம்:
இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி , ஒரு வழக்கமான போலீஸ் கதையைத் திரைக்கதை நுணுக்கத்தால் சுவாரஸ்யமாக்கியுள்ளார். குறிப்பாக, இடைவேளைக் காட்சியிலும், படத்தின் இறுதியில் வரும் அந்த எதிர்பாராத ட்விஸ்ட்டிலும் இயக்குநர் தனது முத்திரையைப் பதித்துள்ளார். தேவையற்ற காதல் காட்சிகள் அல்லது காமெடிகள் என்று கதையைத் திசைதிருப்பாமல், முழுநேர க்ரைம் த்ரில்லராகக் கொண்டு சென்றதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்.
மொத்தத்தில் படம் எப்படி?
‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ – க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து. லாஜிக் மீறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும், படத்தின் கிளைமாக்ஸ் அந்த குறைகளை மறக்கச் செய்துவிடுகிறது. விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் கதைகளை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்!
ரேட்டிங்: 3.9/5

