Friday: திரை விமர்சனம்

Friday: திரை விமர்சனம்

“கத்தி எடுத்தவன் கத்தியாலேயே மடிவான்” என்கிற கான்செப்ட்தான். ஆனால், இந்த பரபரப்பான கதையை, இயல்பான திரைக்கதை – இசை – ஒளிப்பதிவு – நடிப்பு – இயக்கத்தில் அளித்து அசத்தி இருக்கிறது  Friday படக்குழு.

கட்சியில் தனக்கு போட்டியாக வளரும் நபரை தன் ஆட்களை வைத்துப் போட்டுத் தள்ள திட்டமிடும்  அரசியல்வாதி, கிறார்.  தாயை கொன்றவர்களை பழி தீர்க்க நினைக்கும் இளைஞன்,  தந்தையை கொன்றவர்களை கொலை செய்யும் இன்னொரு இளைஞன்… இதன் பின்னணியில் முன்னும் பின்னுமாக விரியும் அதிரடி திரைக்கதைஉறைய வைக்கிறது.

கே.பி.ஒய். தீனா அசத்துகிறார்.  ஏற்கெனவே சிறு சிறு வேடங்களில் வந்தாலும் இயல்பான நடிப்பார் கவர்வார். இதில் அவரது தகுதிக்கு ஏற்ற முழு நீள வேடம்.  கண்களில் எப்போதும் தேங்கி நிற்கும் அந்த உணர்வை  ஆத்திரம் என்பதா,  அச்சம் என்பதா, வன்மம் என்பதா… அற்புதமாக நடித்து இருக்கிறார்.

அனிஷ் மாசிலாமணியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். தம்பி மீது வைத்திருக்கும் பாசம்,  கொலைத் தொழிலை விட்டுவிட நினைக்கும் மனநிலை,  எதிரிகளை துவம்சம் செய்யும் ஆக்ரோசம் என கவர்கிறார்.

கொடூர அரசியல்வாதியாக வந்து, வழக்கம்போல் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார் மைம் கோபி.

இதர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும்   ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் , சித்ராசேனன், சித்து குமரேசன் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ் கன்னியாகுமரி நிலப்பரப்பை அற்புதமாக அளிித்து இருக்கிறார். இரவு நேர சாலை,  அந்த தோப்பு வீடு.. என அனைத்துமே இன்னும் கண்களில் நிற்கின்றன.

காட்சிகளுக்கு ஏற்ற  சிறப்பான இசையை தந்திருக்கிறார், டுமே. ஆத்திரம், வன்மம், சோகம் என அனைத்து உணர்வுகளையும் இவரது இசை வெளிப்படுத்துகிறார். எல்லா காட்சிகளிலும் துருத்திக்கொண்டு இல்லாமல்,  அமைதி காக்க வேண்டிய இடத்தில் மவுனமாகி கூடுதலாக கவர்கிறது இவரது இசை.

பிரவீன் எம்.-இன் எடிட்டிங் கத்தியின் கூர்மை.

வழக்கமான பழிக்குப்பழி – கத்திக்குக் கத்தி கதைதான் என்றாலும் அதை இயல்பான திரைக்கதையில் அளித்து கவனத்தை ஈர்க்கிறார் அறிமுகஇயக்குநர் ஹரி வெங்கடேஷ்.  விநாடிகளில் மாறி கண்களுக்கு எரிச்சலூட்டும் கேமரா கோணங்கள், காதுகளை கிழிக்கும் இசை என்றெல்லாம் இல்லாமல்…  காட்சிக்குத் தேவையான இசை மற்றும் ஒளிப்பதிவை வாங்கி இருக்கிறார். நடிப்பும் அப்படியே.

மொத்தத்தில், ப்ரைடே.. கவர்கிறது.

ரேட்டிங்:  3.9/5 

 

Related Posts