கம்பி கட்ன கதை: திரை விமர்சனம்: நித்தியானந்தாவின் கதை!

கம்பி கட்ன கதை: திரை விமர்சனம்: நித்தியானந்தாவின் கதை!

மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி உருவாக்கத்தில் நட்ராஜ் (நட்டி), முகேஷ் ரவி, சிங்கம்புலிஉள்ளிட்டோர் நடிப்பில் வரும் 17ம் தேதி வெளியாக இருக்கும் ‘கல கல’ திரைப்படம், ‘கம்பி கட்ன கதை’.வரலாற்றில் புகழ் பெற்றது கோஹினூர் வைரம். இதை, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். அந்த வைரத்தை ராணிக்கு பரிசளித்த வெள்ளையர், இன்னொரு வைரத்தையும் கண்டுபடித்தார்.. அதைத் திருடி தானே வைத்துக்கொண்டார் என்றும், அந்த வைரத்தை இப்போது சிலர் தேட.. அது அவர்களுக்கு கிடைத்ததா என்றும் கற்பனையை பறக்க விட்டு சுவாரஸ்ய படத்தை அளித்து இருக்கிறார்கள்.

அதாவது தற்போது அந்த வைரத்தை அடைய விரும்புகிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால் இது வெளிப்படையாக தெரிந்தால் சிக்கலாகும் என்பதால், மோசடி பேர்வழியான நட்டியிடம் பொறுப்பை கொடுக்கிறார்.

நட்டியும் அந்த வைரத்தைக் கண்டுபிடிக்கிறார். ஆனால் வைரம் கைக்கு வந்ததும் அதைத் தானே அபகரிக்க நினைக்கிறார்.

அந்த அரசியல்வாதி நட்டியை துரத்த.. இவர் தப்பிக்க… இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.அல்வா கொடுக்கும் கதாபாத்திரம் என்றால், (நான் அவனில்லை) ஜீவன், சதுரங்க வேட்டை நட்டி ஆகியோர்தானே நினைவுக்கு வருவார்கள்… இதில் நட்டி.

“வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.. நான்காவது மாத சம்பளத்தை கமிஷனாக கொடுத்தால் போதும்…” என்று மக்களை ஏமாற்றுவதில் துவங்கி, சாமியார் வேடம் போட்டு பெண்களை மயக்கி சல்லாபிப்பது வரை அதிரடி வேடம் நட்டிக்கு!

பிரபல சாமியார் நித்தியானந்தாவை குறிப்பிடும்படியாக கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இரண்டாவது நாயகன் என்பதைவிட, இணை நாயகன் என சொல்லும்படியான வேடத்தை ஏற்று இருக்கிறார் முகேஷ் ரவி. அனைவரும் மதிக்கும் சாமியாரை, “நண்பா.. டேய்..” என்றெல்லாம் அசால்டாக பேசி ரசிக்க வைக்கிறார்.

முன்னாள் நடிகை ரஞ்சிதாவை நினைவுபடுத்தும் வேடத்தை ஸ்ரீ ரஞ்சனி ஏற்றிருக்கிறார். அவருடன், ஷாலினியும் அசத்துகிறார்.

நட்டியின் சீடராக வரும் சிங்கம் புலி அதகளம் செய்திருக்கிறார். குருவிடம் அவர் பேசும் கோல்மால் டயலாக்குகள், சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன.

ஷாலினியை கொல்ல திட்டமிடும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் (பூனை சுல்தான்) கோவை குணா என அனைவருமே சிரிக்க வைக்கிறார்கள்.

திரைக்கதை வசனத்தை எழுதி நடித்தும் இருக்கிறார் தா. முருகானந்தம். ரசிக்க வைக்கும் நகைச்சுவை. அதே நேரம், டபுள் மீனிங் வசனங்களும் அதிகம் என்பதை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஜெய்யின் ஒளிப்பதிவு சிறப்பு. அதுவும் கடற்கரை காட்சிகள் கூடுதலாய் ஈர்க்கின்றன.

சதீஷின் இசை, படத்துக்கு பலம்.

அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். சாமியார்களின் லீலைகளை படமாக்கும் அவரது தைரியத்தை பாராட்டலாம்.

அதே நேரம், காட்மேன் என்கிற வெப் தொடரை இயக்கினார் பாபு யோகேஸ்வரன்.  அதன் டீசர் வெளியானதுதான் தாமதம். சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டோர் கொதித்தெழுந்தனர்.  அதைத் தயாரித்த ஸீ நிறுவனம், “தொடரை வெளியிட மாட்டோம்” என நிறுத்திவைத்துவிட்டது.  இத்தொடரை எதிர்த்தவர்கள், “இந்து மதத்தைப் புண்படுத்துகிறது” என்று காரணம் சொன்னார்கள்.

அப்படிப் பார்த்தால், இந்தப் படமும் இந்து மதத்தை புண்படுத்துகிறதுதான். ஆனால் ஒன்றிய பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் சென்சார் போர்டு அனுமதித்து இருக்கிறது.

இதற்குக் காரணம், காட்மேன் தொடரில் சங்கராச்சாரி போன்ற தோற்றத்தில் இருந்தவர் முதன்மையான கதாபாத்திரமாக காண்பிக்கப்பட்டார்.  இந்தத் திரைப்படத்தில் நித்தியானந்தாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆக, அவர்களைப் பொறுத்தவரை, சங்கராச்சாரிக்கு ஒரு நீதி.. நித்தியானந்தாவுக்கு ஒரு நீதி.

நமக்கு சம நீதிதான்.. எந்த சாமியாரை அம்பலப்படுத்தினாலும் வாழ்த்துவோம்.

ஆகவே,  கம்பி கட்ன கதை படத்தை அனைவரும் பார்த்து ரசித்து சிரிக்கலாம், சிந்திக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5

Related Posts