“ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றவர் காடுவெட்டி குரு!”: ‘படையாண்ட மாவீரா’ விழாவில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா

“ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றவர் காடுவெட்டி குரு!”: ‘படையாண்ட மாவீரா’ விழாவில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா

வ. கௌதமன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம், ‘படையாண்ட மாவீரா’ .  இத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘ ‘நிழல்கள்’ ரவி , உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைதது உள்ளார்.

இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.

வன்னியர் சங்க தலைவராகவும், பா.ம.கட்சியின் முக்கிய பிரமுகராகவும் விளங்கிய, காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில், ”ஒரு திரைப்படம் வெள்ளை தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது.

இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை?

நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அப்படியே நம்புகிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் ஒருவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு.

அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்…! அதை திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.

நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை திட்டமிட்ட போது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு.

அதுமட்டுமல்ல… அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர், அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தவர், ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றவர், வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடியவர்.

இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவரான காடுவெட்டி குருவின் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது.‌ இதனை திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.

இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள்.

இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்து போராடியவர் காடுவெட்டி குரு. இதை படைப்பின் மூலமாக சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.