மதராஸி: திரைவிமர்சனம்: இரு முருகர்களின் சூரசம்’காரம்’!

மதராஸி: திரைவிமர்சனம்: இரு முருகர்களின் சூரசம்’காரம்’!

முதலிலேயே சொல்லிவிடலாம்… தீனா, ரமணா, கஜினி உள்ளிட்ட அதிரடி திரைப்படங்களின் இயக்குநர் என்கிற முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தான் வெறும் காமெடி ஹீரோ மட்டுமல்ல… அதிரடி காட்டவும், நெகிழ வைக்கவும் முடியும் என்பதை சிறப்பாக நிரூபித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த இரு ‘முருகர்களின்’ அதிரடி சூரசம்ஹாரமே, ‘மதராஸி’.  ஆனால் காரம் மிக அதிகம்.

இனி கதைக்குள் போவோம்…

மாலதியும், ரகுவும் காதலிக்கிறார்கள். இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு காரணத்தினால் ரகுவை விட்டு விலகுகிறார் மாலதி.

தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார் ரகு. எதிர்பாராத விதமாக, நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை பரப்பும் வில்லன் குடோனுக்குள் சென்று அவர்களை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த வில்லன் கோஷ்டி, மாலதியை கடத்தி வைத்துவிடுகிறது.

அதன் பிறகு நடந்தது என்ன… வில்லன்களை ரகு வீழ்த்தினாரா… மாலதியை மீட்டாரா என்பதே கதை.

சிவகார்த்திகேயன் நடிப்பு அசத்தல். வழக்கமான ஜாலி கேரக்டரில் கொஞ்சமே வருகிறார். மற்றது அதி தீவிர காதலி ப்ரியர்.. அதோடு ரணகளம் புரியும் வெறிகொண்ட மனிதர் என நடிப்பில் வித்தியாசப்படுத்தி கவர்கிறார்.

சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் தன் குடும்பத்தினர் என நினைத்து ஓடி ஓடி உதவுவது, “மாலதி பெயரை ஏன்டா சொன்னே…” என்று சொல்லிச் சொல்லி வில்லனை சுடுவது… இப்படி நிறைய சொல்லலாம்.

கன்னட ஹீரோயின் ருக்மணி வசந்துக்கு தமிழில் முதல் படம். அழகாக இருக்கிறார்.. அழகாக நடிக்கிறார்.

தனது சுயநலத்துக்காக, சிவகார்த்திகேயனின் பற்கள் மீது காண்பிக்கும் அக்கறை, பிறகு அவரை உணர்ந்த பின் வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான காதல், வில்லன்களிடம் சிக்கி கதறும் காட்சிகள் என சிறப்பாக நடித்து உள்ளார்.

என்.ஐ.ஏ. அதிகாரியாக மக்கள் மீது அக்கறை உள்ளவராக வரும் பிஜு மேனன் சிறப்பாக நடித்து உள்ளார். அதே நேரம் இவர், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் சிறப்பாக நடித்தாலும், மலையாள வாடையுடன் வசனம் பேசுவது ஏன்?

கமல், எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் பிற மொழியை மட்டுமல்ல.. தமிழில் – கொங்கு தமிழ், குமரி தமிழ், நெல்லை தமிழ் – பிய்த்து உதறுகிறார்கள். மலையாள நடிகர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்… வசன உச்சரிப்பையும் இயல்பாக மாற்றுவதுதான் நடிப்பு. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பிஜு மேனன் மகனாக – இவரும் என்.ஐ.ஏ. அதிகாரிதான் – வரும் விக்ராந்த் கவர்கிறார். காட்சிகள் குறைவு என்றாலும், பாத்திரத்துக்கு ஏற்ற முகபாவம், உடல் மொழி என அசத்துகிறார். சிறப்பு.

வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல்.. இரட்டை வில்லன்கள். மிரட்டுகிறார்கள். “எல்லார்கிட்டயும் துப்பாக்கி இருக்கலாம்.. ஆனா நான்தான் வில்லன்” என்று அசால்ட்டாக சொல்வது.. சுவரில் நடனமாடி கடந்து சண்டை போடுவது என அசத்தல்.

அனிருத் இசையில் பாடல்கள் ஓகே. ஆனால், பின்னணி இசை வழக்கம் போல, தகரத்தில் விழுந்த தண்ணீர் ஓசை போலத்தான். தவிர, வில்லனை ஹீரோ அடிப்பதற்கும், ஹீரோவை வில்லன் அடிப்பதற்கும் ஒரே மாதிரி பி.ஜி.எம். போட்டிருக்றார். வித்தியாசப்படுத்தவேண்டாமா..

இனியாவது அனிருத் கதையை உணர்ந்து பின்னணி அமைக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளர் சுதீப், மிரட்டி இருக்கிறார். துறைமுக காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் கவர்கிறார்.கெவின் சண்டைக் காட்சிகள் மிரட்டல். ஆனால் எண்ணிக்கையை குறைக்கலாம். ரத்த கலரை டின் கணக்கில் வாங்கி இருப்பார்கள் போல!

ஏ.ஆர். முருதாஸ் படம் என்றாலே, காதல், சென்டிமெண்ட், ஆக்சன், கருத்துகள் என எல்லாம் அளவோடு இருக்கும். இதில் சண்டைக் காட்சிகள் மட்டும் அதிகம்.

மசாலா படங்களில் இருக்கும் லாஜிக் மீறல்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஆனால் ஒரு சாதாரண இளைஞன், உயிரை பணயம் வைத்து பயங்கரவாதிகளின் கூடாரத்துக்குள் போவது ஏன் என்கிற லாஜிக்கை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சிறு விசயத்தைக் கூட காட்சிப் படுத்தி அசரடிப்பது அவரது ஸ்டைல். அதே போலத்தான் இந்தப் படத்தில் பேருந்து விபத்து காட்சியும். இதெல்லாம் சேர்ந்து படத்துடன் நம்மை எளிதாக பயணிக்க வைத்து விடுகின்றன.

  • டி.வி.சோமு