‘இந்திரா’: திரை விமர்சனம்

‘இந்திரா’: திரை விமர்சனம்

காவல்துறையில் பணியாற்றும் இந்திராவுக்கு அதீத குடிப்பழக்கம். மது போதையில் காவல்துறை வாகனத்தை விபத்துக்கு உள்ளாக்கிவிடுகிறார். இதனால் இடை நீக்கம் செய்யப்படுகிறார். குடி அதிகமாகிறது.

இவரது போக்கு பிடிக்காததால், மனைவி கயலும் பாராமுகமாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திராவுக்கு கண்பார்வை பறிபோகிறது. அதன் பிறகு மனைவி கயல் எல்லாமுமாக இருக்கிறார்.இதற்கிடையே அபிமன்யூ என்கிற சீரியல் கில்லர், வரிசையாக கொலைகளைச் செய்து நகரை அலறவைத்துக்கொண்டு இருக்கிறான். போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்வதோடு, பிணத்தின் கையை மட்டும் தனியாக வெட்டி விடுவது அவன் ஸ்டைல்.

இந்த நிலையில் காவல் அதிகாரி இந்திராவின் மனைவி கயல் கொல்லப்படுகிறார்.

அவர் யாரால் கொல்லப்பட்டார் என்பதுதான் இன்னும் திகிலான, மீதிக்கதை. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி இந்திராவாக, குடிக்கொண்டே இருக்கும் நபராக நடித்து இருக்கிறாார் வசந்த் ரவி. படத்தில் அதிகமாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம் இவருக்குத்தான். அதிகமாகத்தான் நடிக்கிறார். அதுவும் மனைவி கொல்லப்பட்ட காட்சியில் அதிரவைக்கிறார். தவிர நிஜமாகவே பார்வையற்றவர் போல் நடித்ததை கூடுதலாக பாராட்டலாம்.

இவரது மனைவி கயலாக வருகிறார், மெஹ்ரீன் பிர்சாடா. கணவன் மீது கொண்டிருக்கும் காதல், அவனது குடிப்பழக்கம் பிடிக்காமல் காட்டும் கோபம், அவனே கண்பார்வை இழந்து தவிக்கும்போது ஆதரவாக இருப்பது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.சீரியல் கில்லர் அபிமன்யூவாக, பிரபல தெலுங்கு நடிகர் சுனில் நடித்து உள்ளார். ஒவ்வொரு கொலையின் போதும் மிரட்டுகிறார். அவரது கொலை குறித்து டி.வி.யில் செய்திகள் ஒளிபரப்பாக… ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே… அசத்தல் நடிப்பு!

வேலைக்கார பெண்மதியாக வரும் ஆர்னிகா சுரேந்திரன், வழக்கம்போல அழகு, அழகான நடிப்பு. காதலன் வாங்கி வரும் தங்கத் தாலியை அணியும் போது அவர் முகத்தில் அத்தனை பளிச்! முடிவில் கலங்க வைத்து விடுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேந்திராவாக வரும் கல்யாண்குார் அற்புதமான நடிப்பை அளித்து இருக்கிறார். நாயகனை விசாரிக்கும் சந்தேகப் பார்வையிலேயே தன்னை நிரூபித்து விடுகிறார்.

ஆர்னிகாவின் காதலனாக வரும் இளைஞரும் சிறந்த நடிப்பை அளித்து இருக்கிறார். காதலி கொண்டிருக்கும் பாசம், அவளது மரணத்தை கண் முன்னே பார்த்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையை கண்களிலேயே வெளிப்படுத்துவது, இறுதிக் காட்சியில் காட்டும் ஆவேசம்… சிறப்பு!நாயகனின் நண்பராக வரும் ராஜ்குார், எப்போதும்போல் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

ஒரு க்ரைம் த்ரில்லருக்கான ஒளிப்பதிவை அளித்து பிரமிப்பை கூட்டி இருக்கிறது பிரபு ராகவின் கேமரா.

அதே போல அஜ்மல் தக்‌ஷின் இசை, பதட்டத்தை அதிகரிக்கிறது. அதே நேரம், “நீயின்றி வேறேதும்” பாடல் ரசிக்க வைக்கிறது.

த்ரில்லருக்கு ஏற்ப காட்சிகளை சீராக அளித்து இருக்கிறார் எடிட்டர் ப்ரவீன் கே.எல்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அசத்தி இருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் விக்கி.

எழுத்து இயக்குநர் சபரீஸ் நந்தா முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை குறையாக சுவாரஸ்யம்.. எதிர்பாராத ட்விஸ்ட்!

  • டி.வி.சோமு

Related Posts