சுழல் 2: விமர்சனம்: குழப்புதா, மிரட்டுதா?

சுழல் 2: விமர்சனம்: குழப்புதா, மிரட்டுதா?

புஷ்கர் – காயத்ரி எழுத்து உருவாக்கத்தில்  பிரம்மா – சர்ஜூன் இயக்கத்தில் அமேசாம் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சுழல் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் வெளியாகி உள்ளது.

பெண் குழந்தைகளுக்கு  அதிகபட்சமான பாலியல் தொல்லைகள் நெருக்கமானவர்கள் மூலமாகத்தான் நடக்கிறது என்பதை த்ரில்லிங் குறையாமல் சொல்லியிருந்தனர்.

இந்த இரண்டாவது சீசனிலும்  ரசிகர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இவர்கள் கையிலெடுத்த அந்த அஷ்ட காளி திருவிழா காட்சிகளும் 8 பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும் பரபரப்புக்கு பஞ்சமின்றி எடுத்து சொல்லியிருக்கிறது சுழல் 2.

 கதை:

தனது தங்கையையும் தன்னையும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த அரக்கனை தங்கையை கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக கொலை செய்யும் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறையில் அடைக்கப்பட அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி எஸ்ஐ சக்கரவர்த்தியுடையது (கதிர்) என்பது குறித்த இன்னொரு வழக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.

நந்தினி தற்காப்புக்காகத்தான் அந்த கொலையை செய்தார் என கோர்ட்டையே அலற விடும் செல்லப்பா (லால்) திடீரென கொல்லப்படுகிறார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்கிற விசாரணையில் இருந்து துவங்குகிறது சழல் 2

இதிலும் விசாரணை அதிகாரி சக்கர (கதிர்) தான்.

இது தற்கொலை என நினைத்துக் கொண்டிருக்க 8 பெண்கள் செல்லப்பாவை நான் தான் கொன்றேன் என காவல் நிலையங்களில் ஆஜராக அந்த ஊரில் அஷ்டகாளி திருவிழாவும் நடைபெறுகிறது. 8 பெண்களின் பெயர்களையும் அஷ்ட காளிகளின் பெயர்களாகவே வைத்துள்ள நிலையில், தீய சக்தியை அவர்கள் வதம் செய்தார்களா? அவர்கள் கொலை வழக்கில் சரண்டராக என்ன காரணம் என்பதை ஹீரோ கதிர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை என்ன என்பதும் தான் இந்த சுழல் 2 வெப்சீரிஸின் கதை.முதல் பாகத்தை போலவே இந்த வெப்சீரிஸும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பதபதைப்பை கடத்துகிறது. சாம்பலூர் கிராமத்தில் இருந்து கதை காளிப்பட்டிணத்திற்கு நகர்கிறது. ஒரு பக்கம் கிரைம் மிஸ்டரி கதை விறுவிறுப்பாக செல்ல, இன்னொரு பக்கம் திருவிழா காட்சிகள் கண்கொள்ளா காட்சிகளாக உள்ளன. அஷ்ட காளி திருவிழாவை ஆரம்பித்து வைக்கும் லால் உயிரிழந்து விட அவரை கொன்றது யாராக இருக்கும் என கதிர் இன்ஸ்பெக்டிங் ஆபிசராக விசாரிக்க அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சரவணன் அவருக்கு வழக்கு விசாரணையில் உடன் நிற்கிறார்.

தீர்ப்பு கிடைத்துவிடும் வெளியே சென்று விடலாம் என்கிற நம்பிக்கையுடன் பெண்கள் சிறைச்சாலையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழக்கறிஞர் செல்லப்பா கொல்லப்பட்ட செய்தி தலையில் இடியை இறக்குகிறது. அவரை கொன்றதாக 8 இளம் பெண்கள் போலீஸில் வாக்குமூலம் கொடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் பெண்கள் சிறப்பு சிறைச்சாலைக்கே வருகின்றனர்.

அஷ்ட காளிகள் தான் ஹைலைட்: முத்தாரம்மன் (முத்து), வீரகாளியம்மன் (வீரா), முப்பிடாரி (முப்பி), உலகநாயகி (உலகு), அரியநாச்சி (நாச்சி), செண்பகவள்ளி (செண்பகம்), சந்தனமாரி (சந்தனம்), காந்தாரி என 8 காளியம்மன் பெயர்களையும் 8 பெண்களுக்கு வைத்துள்ளனர். அவர்களை காப்பாற்றும் நாகம்மா கதையும் நச்சென இருக்கு. இவர்களுக்குள் என்ன தொடர்பு? இவர்கள் ஏன் செல்லப்பாவை கொல்ல வேண்டும் என்கிற வழக்கை கதிருடன் சேர்ந்துக் கொண்டு ரசிகர்களும் கடைசி வரை கதையில் வரும் பலர் மீது சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்துள்ளது சிறப்பு.ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த Knives Out எனும் ஹாலிவுட் படத்திலும் வயதான ஒருவர் உயிரிழக்க அவரை அந்த வீட்டைச் சேர்ந்த 8 பேரில் யார் கொன்றார்கள் என்கிற விசாரணையை டேனியல் கிரெய்க் நடத்தும் படத்தில் இருந்து சில காட்சிகள் இன்ஸ்பயர் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. ஆனால், அதையும் தாண்டி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளையும் சமூகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் அவலங்களையும் பெண்களுக்கு சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைகளையும் எடுத்துக் காட்டியிருக்கும் விதமும் நல்லவர்கள் என நினைப்பவர்கள் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்கள் என நினைப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கு என முதல் சீசனில் கொடுக்காத சில நம்பிக்கையையும் இந்த சீசனில் புஷ்கர் – காயத்ரி தங்கள் எழுத்துக்கள் மூலம் விதைத்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசை மற்றும் ஆபிரகாமின் ஒளிப்பதிவு எல்லாம் பெரிய பலம். அதற்காகவே தாராளமாக இந்த வெப்சீரிஸை பார்க்கலாம்.

மொத்தத்தில், சுழல் 2 குழப்பவில்லை.. அதிரடியாக மிரட்டவே செய்கிறது… அவசியம் பார்க்க வேண்டிய வெப் தொடர்!

Related Posts