“’சாமானியன்’ என்கிற குழந்தையின் தகப்பன் நான் தான் ; கதாசிரியர் கார்த்திக் குமார் ஆதங்கம்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ராமராஜன் நாயகனாக நடிக்கும் சாமானியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கிடையே, படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் சேகர் புகார் தெரிவித்தார். இந்நிலையில், ‘சாமானியன்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில், கதாசிரியர் கார்த்திக் குமார், “இங்கே அங்கீகாரம் அழிக்கப்படலாம். ஆனால் அடையாளம் அழிக்கப்பட கூடாது. ஆனால் என்னுடைய அடையாளம் அழிக்கப்படுகிறது. 2015ல் நடந்த உண்மை சம்பவத்தை, பல அவமானங்களுடன் அதைக் கடந்து வந்து இழப்புகளை சந்தித்து, நான் நேரில் அனுபவித்த வலியை, மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கி தயாரிப்பாளர் மதியழகனிடம் கூறினேன். இந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்த நிலையில் கதை, திரைக்கதை, வசனம் என இருந்த என் பெயரில் திரைக்கதை, வசனம் என ஒவ்வொன்றாக பறிபோய் இப்போது கதை என்று மட்டுமே என் பெயர் ஒரு மூலையில் இருக்கிறது. எதற்குமே நான் ரியாக்ட் பண்ணவில்லை.
இப்போது அதுவும் பறிபோகின்ற ஒரு சூழல் இருக்கிறது. பல பிரச்சினைகளை கடந்து இந்த படம் வெளியாகின்ற சூழலில் கூட இந்த படத்தின் கதை எங்களுடையது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர் கே செல்வமணி போன்றவர்கள் அப்படி புகார் அளித்தவர்களின் கதைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆணித்தரமாக கூறி கடிதமே அளித்து விட்டனர்.
இந்த படத்தில் ராமராஜனின் கதாபாத்திர பெயரான சங்கர நாராயணன் என்பது எனது தாத்தாவின் பெயர். இந்த படத்தில் இடம்பெறும் சரஸ்வதி நிலையம் என்பது 2016ல் நான் வாங்கிய வீட்டிற்கு வைத்த பெயர். இதில் நடித்த ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர் கூட என்னுடைய நெருங்கியவர்களின் கதாபாத்திரங்கள் தான். இந்த படத்தில் பணியாற்றியதால் நான் பல விஷயங்களை இழந்தேன். ராமராஜன் சாரை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்தேன்.. அதையும் பாதியில் தடுத்து விட்டார்கள். ஆனால் இந்த சாமானியன் என்கிற குழந்தையின் தகப்பன் நான் தான் என்கிற அடையாளத்தை அழிக்க முடியாது. நேற்று இந்த படத்தை பார்த்த 140 பிரபலங்கள் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டுகிறார்கள். 13 நாட்களில் நான் அதை எழுதி முடித்தேன்” என்றார்.
