15-09-2023 முதல் 21-09-2023: இந்த வார ராசிபலன்

15-09-2023 முதல் 21-09-2023: இந்த வார ராசிபலன்

செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் சிம்ம ராசியில் இருக்கிறார். செப்டம்பர் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம ராசியில் இருக்கிறார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் கடகத்தில் அமர்ந்திருக்கிறார். கும்பத்தில் சனி… மேஷத்தில் ராகு… துலாத்தில் கேது… என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் மற்ற கிரகங்களில் மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே… நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 5,6 ஆம் இடங்களில் இருக்கிறார். தூரநோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த கவலைகளை புறம் தள்ளுவீர்கள். சந்திரனின் சஞ்சாரங்கள் சிறப்பான பலன்களை பொறுப்பாக தரும் நிலையில் உள்ளது. தொழிலுக்கு போட்டியாக வருகின்றவர்களை ஓவர் டேக் செய்து உயர்ந்த நிலையை அடைவீர்கள். செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளால் உங்களுக்கு செலவுகள் வரலாம். நில விற்பனையில் பெரிய லாபத்தை அடைவீர்கள். புதன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். பார்ட்னர்களுடன் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பாக்கிகளை முறையாக அடைப்பீர்கள். குரு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தில் காணப்படுகின்ற மந்த நிலையை போக்க புதிய திட்டங்களை வகுப்பீர்கள். சுக்ரன் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். குடியிருக்கும் வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவீர்கள். ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சனி 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்களில் மூலம் எதிர்பார்த்த பலனை அடைவீர்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசாங்க கான்ட்ராக்ட்களை பெறுவீர்கள். ராகு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். குடும்பத்தில் உள்ள பிரச்சனையை வெளியில் பேசி சிக்கலை அதிகமாக்காதீர்கள். கேது ஏழாம் இடத்தில் இருக்கிறார். மனைவி சொல்லே மந்திரம் என்று மனத்தின்மையோடு செயல்படுங்கள் குழப்பங்கள் தீரும். 19,20,21 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

 ரிஷபராசி அன்பர்களே…. சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். புகழையும் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்ள புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு பக்க துணையாக இருப்பார்கள். சந்திரனின் நகர்வுகள் ஏற்ற இறக்கமான பலன்களைத் தரும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் கவனமுடன் செயல்படுங்கள். செவ்வாய் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நில விற்பனையில் இருந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் ஆதரவால் விலகும். உங்கள் வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மாணவர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். பெற்றோர்களுக்கு பெருமையை தேடி தருவார்கள். குரு 12 ஆம் வீட்டில் இருக்கிறார். பங்குத் தொழில் பயங்கரமான லாபத்தை கொண்டு வரும். ஆன்லைன் வர்த்தகங்களும் அமோகமான பலனைத் தரும். சுக்கிரன் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். சொல்லலாமா வேண்டாமா என்ற காதலை துணிச்சலுடன் வெளிப்படுத்துவீர்கள். தடைப்பட்டு நின்ற திருமணங்கள் தானாக நடக்கும். சனி 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்திற்கு சில முட்டுக்கட்டைகள் தோன்றி மறையும். புதிய ஆர்டர்களை பெறுவதற்காக வெளியூர் செல்வீர்கள். ராகு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பணவரவு தாராளமாக இருக்கும். கேது ஆறாம் இடத்தில் இருக்கிறார். எதிர்ப்புகள் முனை மழுங்கி போகும்.21 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.

 மிதுன ராசி அன்பர்களே… சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3,4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இரவு பகல் பாராமல் உழைத்து தொழில் எதிரிகளை திணறடிப்பீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய சாதனை படைப்பீர்கள். சந்திரனின் இடமாற்றம் தொழிலுக்கு ஏற்றத்தை கொண்டு வரும். பியூட்டி பார்லர்கள், அலங்காரப் பொருள் விற்பனையகம் போன்றவை அதிக லாபத்தை கொடுக்கும். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். சுலபமாக முடியும் என்ற அரசு வேலைகள் இழுபறியாக நடக்கும். கட்டுமானத் தொழிலில் சிக்கல்கள் தோன்றும். புதன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை தரும் வாரம். சம்பள உயர்வு இடமாற்றம் போன்றவை மன மகிழ்ச்சியை கொடுக்கும். குரு 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலைக்காக அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். செய்கின்ற தொழிலில் திருப்புமுனை உண்டாகும். சுக்கிரன் 2 ஆம் ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினருக்கு சில போராட்டங்கள் தலைவலியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். நெருக்கமான உறவுகள் வில்லங்கத்தில் இறங்குவார்கள். அடையாளம் கண்டு விலகி நில்லுங்கள். ராகு 11ஆம் வீட்டில் இருக்கிறார். பழைய பாக்கிகள் சுலபமாக வசூல் ஆகும். கேது நான்காம் வீட்டில் இருக்கிறார். பண வரவு தாராளமாக இருந்தாலும் செலவுகள் கை மீறிப் போகும்.

கடக ராசி அன்பர்களே… சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 2, 3 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். நெருங்கிய நண்பரின் குடும்பப் பிரச்சனையை சாமர்த்தியமான பேச்சால் தீர்த்து வைப்பீர்கள். கையிருப்பை அதிகப்படுத்த தொழிலில் முனைப்புடன் செயல்படுவீர்கள். சந்திரனின் இடமாற்றங்கள் அருமையான பலனை கொண்டு வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நகை வியாபாரிகள் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். செவ்வாய் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். நினைத்த காரியம் தடையின்றி நடக்கும். சிறு வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் பெறுவார்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். புதன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். தனியார் துறை ஊழியர்கள் முதலாளியின் பாராட்டை பெறுவார்கள். வழக்கறிஞர்கள் திறமையை வெளிப்படுத்தி தொழிலில் மேன்மை அடைவார்கள். குரு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். சென்ற இடமெல்லாம் சிறப்பு அடைவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பரின் திருமணத்திற்கு பண உதவி செய்வீர்கள். மனைவி வகையிலிருந்து சொத்து கிடைக்கும். சனி 8 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் பிடிவாதமாக நடந்து கொள்ளாதீர்கள். குழப்ப நிலை அதிகரிக்கும். ராகு பத்தாம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். கேது நான்காம் வீட்டில் இருக்கிறார். அந்தஸ்தை அதிகரிக்க ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

 சிம்ம ராசி அன்பர்களே… உங்கள் ராசிநாதன் 1,2 ஆம் இடங்களில் இருக்கிறார். அடுத்தவர் காரியங்களில் தலையிடுவதை அறவே நிறுத்திக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் குதர்க்கமாக பேசாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உலவுகின்ற நிலவு உங்களுக்கு உத்வேகமான பலன்களை கொடுக்கும். வெளியூர் பயணங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செவ்வாய் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். நில விற்பனையில் பலமாக காலூன்றி நிற்பீர்கள். புதிய வீடு கட்ட பூமி பூஜை போடுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். புதன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். விவசாயத்தில் புதிய நுணுக்கத்தை பயன்படுத்துவீர்கள். தோப்பு குத்தகையின் மூலமாக வருமானம் பெறுவீர்கள். குரு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறாக சில பிரச்சனைகள் உருவாகும். கூட இருந்தே சிலர் வியாபாரத்திற்கு வேட்டு வைக்க நினைப்பார்கள். அதையெல்லாம் சாமர்த்தியமாக தாண்டி வருவீர்கள். சுக்ரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதரியின் திருமணத்தை சந்தோஷமாக நடத்தி வைப்பீர்கள். மல்லிகை தோட்டம் போல் குடும்பத்தில் மணம் வீசி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சனி 7 ஆம் வீட்டில் இருக்கிறார். ஊருக்கு உழைக்கின்ற உங்கள் நல்ல மனதிற்கு மரியாதையும் புகழும் வீடு தேடி வரும். ராகு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். பெரிய மனிதர்களின் ஆதரவால் அரசாங்க வேலையை சுலபமாக முடிப்பீர்கள். கேது மூன்றாம் வீட்டில் இருக்கிறார். பழைய கடன்களை அடைப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும்.

 கன்னி ராசி அன்பர்களே… சூரியன் 12,1 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட சறுக்களை சரி செய்ய தீவிரமாக முயற்சி எடுப்பீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகி நீங்கும். சந்திர பகவானின் அடுத்தடுத்த இடப்பெயர்ச்சி சாதக பாதகங்களை உண்டாக்கும். வெளிநாட்டு வேலைக்காக செய்திருந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். தகப்பனார் வகையில் செலவுகள் வரலாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அதிலிருந்து வில்லங்கம் விலகும். புதன் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். எதிர்பாராத தன வரவு உண்டாகி பழைய கடன்களை அடைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். திருமண முயற்சிகள் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் உண்டாகி மன மகிழ்ச்சியை கொடுக்கும். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் அர்த்தமில்லாத பிரச்சினைகள் தலை தூக்கும். ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிம்மதி கெடும். சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையாது. கொடுக்கல் வாங்கலில் சிறு பிரச்சனைகள் தோன்றும். ராகு எட்டாம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். எதற்காகவும் வீண் வாக்குவாதங்களில் இறங்காதீர்கள்.

துலாம் ராசி அன்பர்களே… உங்கள் ராசிக்கு 11,12 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். எதிர்காலத்திற்கு தேவையான சில திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த வழி வகுப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக வங்கியில் சேமிப்பை உயர்த்துவீர்கள். சந்திரனின் சஞ்சாரங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும். தனியார் துறையில் அதிக வருமானம் பெறுவீர்கள். அரசு வேலை பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை அடைவார்கள். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பண விஷயத்தில் ஒப்பந்தம் போடும்போது நன்றாக படித்துப் பாருங்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு உண்டாகும். புதன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்திற்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தடைகளை தாண்டி தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்களை எதிர்க்க நினைத்தவர்கள் ஏமாந்து போவார்கள். வியாபாரம் சரளமாக நடக்கும். ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத் துறையினர் பிரபலமடைவார்கள். வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் தொழிலில் திறமையை காட்டி செல்வாக்கை அதிகரிப்பார்கள். சனி 5 ஆம் வீட்டில் இருக்கிறார். உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். சிறியவர்களின் நட்பு சிக்கலை கொண்டு போய் விடும். அவப்பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ராகு ஏழாம் இடத்தில் இருக்கிறார். திருமண விஷயங்களில் ஏதாவது தடங்கள் ஏற்படும். நவகிரக வழிபாடு செய்வது நன்மையை கொண்டு வரும். கேது ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். அவஸ்தைப்படப் போவது நீங்கள் தான்.

விருச்சிக ராசி அன்பர்களே… சூரியன் 10,11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபார நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். அதன் பலனாக புதிய ஆர்டர்களை பெற்று திரும்புவீர்கள். வான்மதியின் அனுக்கிரகத்தால் வியாபாரத்தில் மேலும் மேலும் லாபம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் சிறப்பான பலனை அடைவார்கள் . செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். பேஸ்புக் பிரண்ட்ஷிப் தேவைதான். ஆனால் பெண் நண்பர்களிடம் அளவாக உரையாடுங்கள். தேவையில்லாத அவமானங்களை சந்திக்காதீர்கள். புதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். பண வரவு தாராளமாக இருக்கும். மனைவிக்காக தங்க நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் தேவையை பிரியமாக பூர்த்தி செய்வீர்கள். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். ஜவுளி வியாபாரம் அமோகமாக நடக்கும். அலங்கார விற்பனையில் லாபத்தை அள்ளுவீர்கள். சனி 4 ஆம் வீட்டில் இருக்கிறார். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். தொழில் போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். ராகு ஆறாம் வீட்டில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். ரியல் எஸ்டேட் தொழில் கணிசமான லாபத்தை கொடுக்கும். கேது பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார். ஐடி ஊழியர்கள் புதிய சாதனை படைப்பார்கள். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

 தனுசு ராசி அன்பர்களே… சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள். தகுந்த நேரம் வரும்போது அனைத்தும் தானாகவே ஈடேறும். வரவுக்கு ஏற்ற செலவு வரும். சந்திரனின் நகர்களும் சாதக பாதகமான நிலையைத் தரும். வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்துக்கு இருந்த இடையூறுகள் தானாகவே விலகி ஓடும். புதன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். அரசு ஊழியர்கள் சிரத்தையுடன் வேலை பார்ப்பார்கள். தனியார் துறை ஊழியர்களுக்கு வருமானம் பெருகும். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். அரசியல்வாதிகள் அதிக செல்வாக்கு பெறுவார்கள். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தடைபட்டு போன திருமணங்கள் இடையூறுகளை கடந்து சிறப்பாக நடக்கும். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வாக்கும் நாக்கும் பக்குவமாக இருக்க வேண்டும். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். தேவையில்லாத நபர்களுக்கு வாக்கு கொடுக்காதீர்கள். ராகு 5ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பயணங்கள் செல்வீர்கள். கேது பதினோராம் இடத்தில் இருக்கிறார். தேவையான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.

மகர ராசி அன்பர்களே…. சூரியன் 8,9 ஆம் இடங்களில் இருக்கிறார். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உடலை தாக்கும். காரமான உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். சந்திரன் இடப்பெயர்ச்சி சிறப்பான பலன்களை அள்ளித் தரும். சினிமா துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வீடு தேடி வரும் வாய்ப்புகளை சோம்பேறித்தனத்தால் நழுவ விடாதீர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். புதன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு வேலைகள் அனுகூலமாக நடக்கும். வீடு கட்ட இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள். குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். முட்டுக்கட்டையாக இருந்த தடைகளை தாண்டி தொழிலை மேம்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் அரிய காரியங்களை செய்வீர்கள். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் அளந்து பேசுங்கள். கருத்துக்களை திணிக்க வேண்டாம். உங்களை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஓசியில் சாப்பிட ஒரு கூட்டம் காத்திருக்கும். அவற்றை புத்திசாலித்தனமாக ஒதுக்கி விடுங்கள். இல்லையென்றால் கடன் வாங்கி கஷ்டப்படுவீர்கள். ராகு நான்காம் இடத்தில் இருக்கிறார். கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்கள். கேது பத்தாம் இடத்தில் இருக்கிறார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

 கும்ப ராசி அன்பர்களே… சூரியன் 7,8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அலுவல் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்று. குடும்ப நலனுக்காக இரவு பகல் பாராது உழைப்பீர்கள். சந்திரனின் சஞ்சாரம் சிற்சில இடையூறுகளை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் புறந்தள்ளி காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு தாமதமாக கிடைக்கும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய முயற்சிகளை புகுத்துவீர்கள். நீண்ட நாள் விற்காமல் கிடந்த நிலம் விற்பனையாகும். புதன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் மந்தமாக நடக்கும். தொழிலாளர் பிரச்சனையால் உற்பத்தி முடக்கம் ஏற்படும். அரசு ஊழியர்கள் கவனமாக வேலை பார்க்க வேண்டும். குரு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதம் செய்வார்கள். மருத்துவத்துறையில் இளம் மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். சுக்கிரன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். ஆசைப்பட்ட பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள். சனி ராசியிலேயே இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இரும்புத் தொழில் சற்று சறுக்கலாக நடக்கும். ராகு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நினைத்ததை முடிப்பீர்கள். கேது ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.15,16,17 ஆம் தேதி சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

 மீனராசி அன்பர்களே…. சூரியன் 6,7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எரியும் நெருப்பில் விழுந்த வாழைச் சருகு போல் எதிர்ப்புகள் மறைந்து போகும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். சந்திரனின் இடப்பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களைத் தரும். பைனான்ஸ் தொழிலில் எச்சரிக்கையாக ஈடுபடுங்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதரர் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்வீர்கள். சகோதரியின் திருமணத்தை நடத்த முனைப்பு காட்டுவீர்கள். புதன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பங்கு பரிவர்த்தனைகள் சாதகமான பலனைத் தராது. போட்டி பந்தயங்களில் சிறப்பாக வெற்றி பெறுவது கடினம். ஆன்லைன் வர்த்தகங்கள் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். குரு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு. அடுத்தவர் காரியங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைக்காதீர்கள். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உங்கள் செல்வாக்கை காட்ட கடன் வாங்கி செலவு செய்வீர்கள். சனி 12 ஆம் வீட்டில் இருக்கிறார். உணவகத் தொழில் உயரிய லாபத்தை கொடுக்கும். கணினி துறையில் அதிக வருமானம் பெறுவீர்கள். ராகு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களை நிறுத்தும் போது பூட்டிவிட்டு செல்லுங்கள். கேது எட்டாம் இடத்தில் இருக்கிறார். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். 17,18,19 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.